திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய்-சேய்நல ஆஸ்பத்திரியில் தீ விபத்து 36 பச்சிளம் குழந்தைகள் உயிர் தப்பின


திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய்-சேய்நல ஆஸ்பத்திரியில் தீ விபத்து 36 பச்சிளம் குழந்தைகள் உயிர் தப்பின
x
தினத்தந்தி 27 May 2021 5:38 AM IST (Updated: 27 May 2021 5:38 AM IST)
t-max-icont-min-icon

கஸ்தூரிபாய் காந்தி தாய்-சேய் நல ஆஸ்பத்திரியில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் 36 பச்சிளம் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய்-சேய் நல ஆஸ்பத்திரியில் 2-வது தளத்தில் மகப்பேறு வார்டு செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தில் பிரசவித்த தாய்மார்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று 36 பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்கள் சிகிச்சை பெற்று வந்தநிலையில், அந்த வார்டில் டாக்டர்கள் தங்கும் அறையில் இருந்த ஏ.சி.யில் இருந்து திடீரென்று கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் குபுகுபுவென கரும்புகை அந்த அறை முழுவதும் பரவ தொடங்கியது.

உயிர்தப்பிய பச்சிளம் குழந்தைகள்

இதனால் அங்கிருந்த டாக்டர்கள், நர்சுகள், 36 குழந்தைகளுடன் சிகிச்சை பெற்று வந்த தாய்மார்கள் கடும் அதிர்ச்சிக்கும், பீதிக்கும் உள்ளானார்கள். கரும்புகையால் மூச்சுத்திணறலும் ஏற்பட தொடங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற் கிடையே மேல் தளத்தில் கரும்புகை வருவதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்களும் சக நோயாளிகளும் வேகமாக மேலே சென்று 36 குழந்தைகளையும், அந்த குழந்தைகளின் தாய்மார்களையும் பத்திரமாக மீட்டு வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்களின் துரித நடவடிக்கைகளால் இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக 36 பச்சிளம் குழந்தைகள் எந்த தீக்காயமும் இன்றி தப்பியது.

உதயநிதி ஸ்டாலின்

இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்பத்திரி ஊழியர்களே துரிதமாக செயல்பட்டு அங்கு எரிந்த தீயை அணைத்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அங்கு வந்தனர்.

அவர்கள் தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு தாய்மார்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த ஊழியர்களை வெகுவாக பாராட்டினர்.

Next Story