ரூ.7½ கோடி சொத்து சேர்ப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, மனைவி மீது வழக்கு
வேலூர் மண்டல மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை பொறியாளரும், அவருடைய மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர்
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி
வேலூர் காட்பாடி காந்திநகரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வேலூர் மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் இணை தலைமை பொறியாளராக பன்னீர்செல்வம் (வயது 57) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.
மாதந்தோறும் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது, தொழிற்சாலைகள் உரிமத்தை புதுப்பிப்பது உள்ளிட்டவற்றுக்கு கையெழுத்திட அலுவலர்களிடம் பன்னீர்செல்வம் லஞ்சம் பெறுவதாக வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
அதன்பேரில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் பன்னீர்செல்வத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந் தேதி மண்டல அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் பன்னீர்செல்வம் காட்பாடி காந்திநகர் முனிசிபல் காலனியில் உள்ள வாடகை வீட்டிற்கு காரில் புறப்பட்டார்.
அவரை பின்தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் சிறிதுதொலைவில் பன்னீர்செல்வத்தின் காரை நிறுத்தி அதிரடியாக சோதனையிட்டனர். காரில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம், உயர்ரக மதுபான பாட்டில்கள், அலுவலக கோப்புகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் சோதனை செய்தனர். அங்கிருந்து ரூ.33 லட்சத்து 73 ஆயிரம், உயர்ரக மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.7½ கோடி சொத்து சேர்ப்பு
பின்னர் ராணிப்பேட்டை பாரதிநகரில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் மறுநாள் காலை லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் சோதனையிட்டதில், ரூ.3 கோடியே 60 லட்சம், 3½ கிலோ தங்கம், 6½ கிலோ வெள்ளிப்பொருட்கள், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து பன்னீர்செல்வம் மீது லஞ்சம் வாங்கியது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவருடைய வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய மனைவி புஷ்பா ஆகியோரின் பெயரில் உள்ள அசையும், அசையாத சொத்துகளின் மதிப்பு கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி நிலவரப்படி ரூ.77 லட்சத்து 93 ஆயிரத்து 996 ஆக இருந்தது.
அதன்பின்னர் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இருவரின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்தனர். பன்னீர்செல்வத்துக்கு அரசாங்க சம்பளத்தின் மூலம் கிடைத்த வருமானம் ரூ.1 கோடியே 14 லட்சத்து 3 ஆயிரத்து 200 ஆகும். ஆனால், அவர்கள் கூடுதலாக ரூ.5 கோடியே 37 லட்சத்து 78 ஆயிரத்து 812 மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியிருப்பதும், ரூ.2 கோடியே 17 லட்சத்து 3 ஆயிரத்து 340 செலவு செய்திருப்பதும் தெரிய வந்தது. இதன்மூலம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 152 சொத்து சேர்த்தது தெரிய வந்தது.
இதையடுத்து பன்னீர்செல்வம் மற்றும் மனைவி புஷ்பா ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story