திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி


திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி
x
தினத்தந்தி 27 May 2021 11:42 PM IST (Updated: 27 May 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரம் எக்டேர் குறுவை சாகுபடி நடைபெற்று உள்ளது.

திருவாரூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் திகழ்ந்து வருகிறது. இதில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முழுமையாக நெல் சாகுபடி செய்வதால் உணவு உற்பத்தியில் முதன்மை இடம் வகித்து வருகிறது. காவிரி நீரையும், பருவ மழையையும் நம்பி தான் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறுவை சாகுபடி

திருவாரூர் மாவட்டம் முப்போகம் விளைந்த பூமியாக இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில் காவிரி நீர் பிரச்சனை, இயற்கை ஒத்துழைப்பு தராததால் வறட்சி, வெள்ளம் போன்ற பாதிப்புகளால் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு சாகுபடி பரப்பளவு குறைந்தது. திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 32 ஆயிரத்து 800 எக்டேர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6 ஆயிரம் எக்டேர்

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியது. இதற்காக நிலத்தை டிராக்டர் மூலம் சாகுபடிக்கு தயார் செய்து வருகின்றனர். மேலும் நாற்றாங்கால் அமைக்கப்பட்டு நடவு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story