கொரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு


கொரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 27 May 2021 8:32 PM GMT (Updated: 27 May 2021 8:32 PM GMT)

கொரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு

சோழவந்தான்
தமிழ்நாட்டில் மதுரை, சேலம், திருப்பூர், கோவை, ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றுநோய் அதிகமாக மக்களைப் பாதித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் அதிகமாக இருப்பதால் மதுரை அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இடமில்லாமல் கொரோனா நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி ஆலோசனையின் பேரில் சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு, கச்சைகட்டி அரசு ஆரம்பசுகாதார நிலைய தலைமை மருத்துவர் மனோஜ்பாண்டியன், சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் சோழவந்தான் ஆலங்கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா நோய் சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க கூடிய பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். இங்கு நடந்து கொண்டிருந்த பணியை செய்யவிடாமல் தடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு பணிபுரிந்தவர்களையே அங்கிருந்து வெளியேற கூறியதோடு அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோசனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆலங்கொட்டாரம் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்து  வருகிறோம். எங்களுக்கு இப்பள்ளியை சுற்றி தான் நாங்கள் வந்து செல்ல வேண்டும். எங்கள் பகுதியில் கொரோனா தொற்று பரவல் இல்லை. தற்போது இங்கு சிகிச்சை மையம் அமைத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தில் தான் எதிர்க்கிறோம் என்றனர்.

Next Story