திருவள்ளூரில் கூவம் ஆற்றில் திறந்துவிடும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம்; எம்.எல்.ஏ. ஆய்வு


திருவள்ளூரில் கூவம் ஆற்றில் திறந்துவிடும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம்; எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 28 May 2021 11:21 AM IST (Updated: 28 May 2021 11:21 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் கூவம் ஆற்றில் திறந்துவிடும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆய்வு செய்தார்.

மாசடையும் நிலத்தடி நீர்

திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீரை நகராட்சியினர் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலமாக திருவள்ளூர் தேவி மீனாட்சி நகரில் உள்ள பாதாள சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு கழிவு நீரை சுத்திகரித்து, கற்குழாய் சாலை வழியாக கூவம் ஆற்றில் விடுகின்றனர்.

அதேபோல வெங்கத்தூர், கே.கே.நகர், மணவாளநகர், ஒண்டிகுப்பம், காக்களூர், தேவா நகர், மாருதி நகர் போன்ற பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள கழிவுநீரை நேரடியாக கூவம் ஆற்றில் விடுகின்றனர். இதன் காரணமாக கூவம் ஆற்றில் கழிவுநீர் கலந்து தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நிலத்தடி நீர் மாசுபடும் நிலையும் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் அங்கு தொற்றுநோய் பரவும் அபாய நிலையும் உள்ளது. மேலும் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து புட்லூர் தடுப்பணை வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் ஆற்றில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வெங்கத்தூர், மணவாளநகர் மற்றும் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்ககோரி திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்தனர்.

எம்.எல்.ஏ. ஆய்வு

புகாரை பெற்றுக்கொண்ட அவர் நேற்று திடீரென திருவள்ளூரை அடுத்த புட்லூர் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீரை பார்வையிட்ட அவர் அங்கு இருந்த அதிகாரிகளிடம் கூவம் ஆற்றில் கலந்த கழிவுநீர் அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி நிலத்தடி நீர் பாதிக்காத வகையில் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து கூவம் ஆற்றில் படர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றும்படி கூறினார்.

மழைநீர் வெளியேற ஏதுவாக தடுப்பணையில் மதகுகள் அமைத்து தரவேண்டும் என அறிவுறுத்தினார். அவருடன் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ், நகராட்சி பொறியாளர் நாகராஜன், பணி மேற்பார்வையாளர் அமுதன் மற்றும் பலர் இருந்தனர்.


Next Story