2 தினங்களில் 30 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்


2 தினங்களில் 30 ஆயிரம் பேர்  தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்
x
தினத்தந்தி 28 May 2021 2:48 PM GMT (Updated: 28 May 2021 2:48 PM GMT)

மதுரையில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வத்துடன் குவிகின்றனர். கடந்த 2 தினங்களில் 30 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

மதுரை,மே
மதுரையில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வத்துடன் குவிகின்றனர். கடந்த 2 தினங்களில் 30 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினமும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி முகாம்களில் மக்கள் ஆர்வத்துடன் கூட்டம், கூட்டமாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.
30 ஆயிரம் பேர்
மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி 3 லட்சத்து 29 ஆயிரத்து 586 பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். நேற்று முன் தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக 15 ஆயிரத்து 776 பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். இது போல் நேற்றும் 14 ஆயிரத்து 66 பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். அதன்படி 2 தினங்களில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தகுதியுடைய அனைவரும் அருகில் உள்ள முகாம்களில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏமாற்றம்
மதுரையில் பெரும்பாலான மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி இருக்கிறார்கள். கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி விளங்குவதால் மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எனவே மதுரை மாவட்டத்துக்கு போதுமான எண்ணிக்கையில் தடுப்பூசி மருந்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story