ஊரடங்கு கால பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கைத்தொழில்களில் ஆர்வம் காட்டும் தொழிலாளர்கள்


ஊரடங்கு கால பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கைத்தொழில்களில் ஆர்வம் காட்டும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 28 May 2021 5:48 PM GMT (Updated: 28 May 2021 5:48 PM GMT)

ஊரடங்கு கால பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தொழிலாளர்கள், கைத்தொழில்களில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கொரடாச்சேரி,

கொரோனா தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக மாற்றி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பலருடைய வேலைவாய்ப்பை பறித்து, பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது. அன்றாடம் உழைத்தால் தான் வருமானம் என்ற நிலையில் இருந்தவர்கள் தற்போது பெரும் சிரமத்தில் உள்ளனர்.

ஆனாலும் சிலர் இந்த ஊரடங்கினால் ஏற்பட்ட வருவாய் இழப்பை வேறு வகையில் ஈடு செய்வதற்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வீட்டில் இருந்தபடி வருமானம் ஈட்டுவதற்கு உதவும் கைத்தொழில்களை செய்வதில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தென்னங்கீற்றுகள்

அந்த வகையில் கொரடாச்சேரி ஒன்றியம் எண்கண் ஊராட்சியில் ஒரு தொழிலாளி தனது வீட்டுக்கு தேவையான தென்னங்கீற்றுகளை தானே முடைந்து வருகிறார்.

கூரை வீடுகளுக்கு தேவையான கீற்றுகள் தென்னை மரங்கள் அதிகம் உள்ள இடங்களில் முடையப்பட்டு விற்பனைக்கு வரும். அவ்வாறு விற்பனைக்கு வரும் ஒரு கீற்றின் விலை தற்போதைய நிலவரப்படி ரூ.13 ஆகும். 100 கீற்று கொண்ட ஒரு கட்டின் விலை ரூ.1,300 என விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தென்னை மரம் வைத்திருப்பவர்களிடம் ஒரு மட்டையை ரூ.5-க்கு வாங்கி, சேகரித்து அதனை வந்து தண்ணீரில் ஊறவைத்து கீற்றுகளை முடைந்து கொள்கின்றனர்.

விற்பனை

ஒரு மட்டையில் இருந்து 2 கீற்றுகள் செய்ய முடியும். ஒரு மட்டையில் முடையப்படும் 2 கீற்றுகளின் மொத்த விலை ரூ.26 ஆகும். எனவே ரூ.5-க்கு மட்டைகளை பெற்று ரூ.26 மதிப்பிலான கீற்றுகளை முடைந்து அதை விற்று, ஊரடங்கு கால பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகின்றனர்.

எண்கண்ணை சேர்ந்த மற்றொரு தொழிலாளியும் இதுபோல், குடும்பத்தினருடன் சேர்ந்து தென்னை மட்டைகளை வாங்கிவந்து கீற்றுகள் முடைந்து வீட்டுக்கு தேவையான கூரைகளை விற்பனை செய்து வருகிறார்.

தையல்-வற்றல் பிழிதல்

ஊரடங்கு காலத்தில் தங்கள் வீட்டுக்கு தேவையான கீற்றுகளை முடைவதால் வீட்டில் கூரை வேய்வதற்கு ஆகும் செலவும் மிச்சமாகிறது. அதை விற்பதால் வருமானமும் கிடைப்பதாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

இதுபோல் கிராமங்களில் வேலை இழப்பை ஈடு செய்யும் வகையில் தையல் தொழிலிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வற்றல் பிழிதல் போன்ற தொழிலும் ஊரடங்கு காலத்தில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளவர்களுக்கு ஆறுதலாக உள்ளது.

Next Story