கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு


கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 29 May 2021 1:16 AM IST (Updated: 29 May 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நேற்று புதிதாக 1,140 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 12 பேர் உயிரிழந்தனர்.

மதுரை,மே.
மதுரையில் நேற்று புதிதாக 1,140 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 12 பேர் உயிரிழந்தனர்.
10,250 பேருக்கு பரிசோதனை
மதுரையில் நேற்று 10 ஆயிரத்து 250 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 1,140 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 815 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இது வரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல், நேற்று 828 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 680 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம், இதுவரை 45 ஆயிரத்து 659 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். தற்போது, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 89 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 6,300 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 3,250 பேர் கண்காணிப்பு மையங்களிலும், 4,020 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும், மீதமுள்ளவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல், வெளிமாவட்டத்தை சேர்ந்த 473 பேரும் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
12 பேர் உயிரிழப்பு
மதுரையில் கடந்த சில தினங்களாக உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நேற்றும் மதுரையில் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர். 60, 62, 75, 67, 71, 81, 69, 65 வயது முதியவர்கள், 55 வயது பெண், 85, 60, 62 வயது மூதாட்டிகள் ஆகியோர் இறந்தனர். அவர்களில் 8 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 4 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்ததுடன், வேறு சில இணை நோய்களும் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 858 ஆக உயர்ந்துள்ளது.
குறைந்த பாதிப்பு
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2 தினங்களில் மதுரையில் பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது தகுதி உள்ளவர்களுக்கு தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. அதன் மூலம் கொரோனா பாதிப்பு மேலும் குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தையும் முறையாக கடைபிடித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றனர்.

Next Story