கரகம் ஆடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைஞர்கள்


கரகம் ஆடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைஞர்கள்
x
தினத்தந்தி 29 May 2021 9:32 PM GMT (Updated: 29 May 2021 9:32 PM GMT)

அவனியாபுரத்தில் கரகம் ஆடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைஞர்கள் திருவிழாக்கள் இல்லாததால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருப்பரங்குன்றம்,

அவனியாபுரத்தில் கரகம் ஆடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைஞர்கள் திருவிழாக்கள் இல்லாததால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவிழாக்கள் இல்லை

கொரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருவிழாக்கள் நடை பெறவில்லை. இதனையொட்டி கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
இதனால் கலைஞர்கள் தங்களது அன்றாட செலவுக்கு கூட பணம் இன்றி கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

கரகம் ஆடி விழிப்புணர்வு

திருப்பரங்குன்றத்தில் ஆடல் பாடல் கலைஞர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். அவர்கள் அரசியல் கட்சி மற்றும் கோவில் திருவிழாக்களில் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்து வந்தனர்.
இதேபோல விளாச்சேரியில் தப்பாட்டக்கலைஞர்கள் அவனியாபுரத்தில் நாட்டுப்புற கலைஞர்கள்  உள்ளனர்..அவர்கள் மதுரைமாவட்டத்தில் நடைபெறும் கோவில் திருவிழாகள், பல்வேறு நிகழ்ச்சிகளில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கட்டைக்கால் ஆட்டம் ஆடி அன்றாடம் பிழைப்பு நடத்தி வந்தனர்.
தற்போது ஊரடங்கால் வேலை இன்றி அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அவனியாபுரத்தில் ஒன்று கூடிய நாட்டுப்புற கலைஞர்கள் கரகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடத்தி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேள, தாளம் அடித்து நாதஸ்வரம் வாசித்து அனைவரும் முககவசம் அணிவோம். சமூக இடைவெளியை பின்பற்றுவோம். கொரோனாவை ஒழிப்போம். மக்களை காப்போம் என உறுதிமொழி எடுத்தனர்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
பின்னர் அவர்கள் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளோம். தொழில் இன்றி கஷ்டப்படுகிறோம். எனவே அரசு எங்களுக்கு நிவாரணமாக மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். இது குறித்து முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம் என்றனர்.

Next Story