சேலம் அரசு ஆஸ்பத்திரியின் புற நோயாளிகள் பிரிவுக்கு கொரோனா அறிகுறியுடன்தினமும் 1,000 பேர் வருகின்றனர் மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு தகவல்


சேலம் அரசு ஆஸ்பத்திரியின் புற நோயாளிகள் பிரிவுக்கு கொரோனா அறிகுறியுடன்தினமும் 1,000 பேர் வருகின்றனர் மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு தகவல்
x

கொரோனா அறிகுறியுடன்தினமும் 1,000 பேர் வருகின்றனர்

சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியின் புற நோயாளிகள் பிரிவுக்கு கொரோனா அறிகுறியுடன் தினமும் 1,000 பேர் வரை வருகின்றனர் என்று மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்தார்.
ஆஸ்பத்திரியில் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு 61 ஆயிரத்தை தாண்டியது. தினமும் ஏராளமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதி படுக்கைகளில் சிகிச்சை பெற இடம் கிடைக்காமல் பலர் தவித்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் உயிரிழப்புகளும் அதிகளவு ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழக மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் ஆஸ்பத்திரி டீன், டாக்டர்கள், செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் ஆஸ்பத்திரியில் உள்ள படுக்கைகள் வசதி குறித்தும், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
டாக்டர்கள் குழுவினர்
இதையடுத்து மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 வாரங்களாக கொரோனா நோயாளிகள் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 1,100 படுக்கைகள் உள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 100 முதல் 130 நோயாளிகள் வரை அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் புறநோயாளிகள் பிரிவுக்கு கொரோனா அறிகுறியுடன் 900 முதல் 1,000 நோயாளிகள் வரை வருகின்றனர். அனைவரும் ஒருவித அச்சத்துடன் வருகின்றனர்.
இங்கிருக்கும் படுக்கைகளுக்கு கூடுதலாக நோயாளிகள் வருவதால் நுழைவு வாயில் அருகே ஆம்புலன்சிலேயே அவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு எந்தளவு பாதிப்பு இருக்கிறது என்பதை அறிவதற்காக டாக்டர்கள் குழுவினர் உள்ளனர். அவர்களில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், லேசாக பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறியுடன் இருப்பவர்கள் என பிரித்து அவர்களை ஒவ்வொரு இடங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதன் மூலம் கூட்ட நெரிசலையும், நோயாளிகள் காத்திருப்பதை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை
ஆஸ்பத்திரிக்கு வருபவர்களில் 20 சதவீதம் பேருக்கு தான் சிகிச்சை தேவைப்படுகிறது. நுரையீரல் பாதிக்கப்படாதவர்கள் வீட்டில் இருந்து அல்லது கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறலாம். சேலம் இரும்பாலையில் அமைக்கப்பட்ட 500 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
மாவட்ட நிர்வாகம் மூலமாக 40 மருத்துவ அலுவலர்களும், 68 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2 ஆயிரத்து 100 மருத்துவ அலுவலர்களும், 3 ஆயிரம் பாரா மெடிக்கல் அலுவலர்களும், 6 ஆயிரம் செவிலியர்களை இந்த கொரோனா நேரத்தில் கூடுதலாக நியமிக்க மருத்துவ கல்லூரிகளின் டீன்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக 30 படுக்கைகள் கொண்ட ஒரு வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் குழு கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனர் சபிதா, டீன் வள்ளி சத்தியமூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் மற்றும் டாக்டர்கள் உள்ளனர்.

Next Story