கோடை வெயில் காரணமாக வேகமாக குறைந்து வரும் பூண்டி ஏரி நீர்மட்டம்


கோடை வெயில் காரணமாக வேகமாக குறைந்து வரும் பூண்டி ஏரி நீர்மட்டம்
x
தினத்தந்தி 30 May 2021 11:36 AM IST (Updated: 30 May 2021 11:36 AM IST)
t-max-icont-min-icon

கோடை வெயிலால் பூண்டி ஏரி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டால் கால்வாய் சீரமைப்பு பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். கடந்த வருடம் செப்டம்பர் 21-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பூண்டி ஏரி கடந்த ஜனவரி மாதத்தில் முழுமையாக நிரம்பியது.

அதன்படி கடந்த பிப்ரவரி 6-ந்தேதி கண்டலேறு பூண்டி ஏரிக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது.

ஜூன் 10-ந்தேதி

இந்த இடைப்பட்ட காலத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 8.060 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. இந்நிலையில் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரி நீர்மட்டம் 22.19 அடி ஆக பதிவாகியது. வெறும் 478 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும்தான் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 140 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதே போல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கன அடி தண்ணீர் வீதம் அனுப்பப்படுகிறது.

பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கனவே ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். அதன் காரணமாக வருகிற ஜூன் 10-ந்தேதி திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்வாய் சீரமைப்பு

ஆனால் புயல்கள் மற்றும் கனமழை காரணமாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணா கால்வாய் கரைகள் சேதமடைந்தன.

சேதமடைந்த கரைகளை சீரமைக்க தமிழக அரசு முதல் கட்டமாக ஜீரோ பாயிண்டியிலிருந்து ஆலப்பாக்கம் வரை 6.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் கால்வாய் சீரமைப்பு பணிகள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Next Story