புதுச்சேரி மாநிலத்தில் சமூக இடைவெளி இன்றி திரண்டனர்; இறைச்சி, காய்கறி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்; தொற்று பரவும் அபாயம்


புதுச்சேரி மாநிலத்தில் சமூக இடைவெளி இன்றி திரண்டனர்; இறைச்சி, காய்கறி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்; தொற்று பரவும் அபாயம்
x
தினத்தந்தி 31 May 2021 12:04 PM GMT (Updated: 31 May 2021 12:04 PM GMT)

சமூக இடைவெளி இல்லாமல் இறைச்சி, காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உருவானது.

மக்கள் கூட்டம்
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகின்ற 7-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது மதியம் 12 மணி வரை காய்கறி, இறைச்சி மற்றும் மளிகை கடைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதல் ஆடு, கோழி இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முககவசம் அணியவேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பொதுமக்கள் பலர் இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தொற்று பரவும் அபாயத்தில் முண்டியடித்தபடி நின்றதை காண முடிந்தது.

போலீசார் எச்சரிக்கை
அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் இதனை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கடை உரிமையாளர்களை அழைத்து சமூக இடைவெளி இல்லாமல் இறைச்சி விற்பனை செய்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பொதுமக்களிடம் கடைகளின் முன்பு வரையப்பட்டிருந்த குறியீடுகளை காண்பித்து அதன் அடிப் படையில் சமூக இடை வெளியை கடைபிடித்து நின்று இறைச்சி வாங்கி 
செல்லும்படி கூறினர்.

தொற்று பரவும் அபாயம்
இதேபோல் புதுச்சேரி அம்பேத்கர் சாலை, காராமணிக்குப்பம், நெல்லித்தோப்பு, வழுதாவூர் சாலை, லாஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் பெண்கள் தரையில் மீன்களை வைத்து வியாபாரம் செய்தனர். அங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இது கொரோனா தொற்று பரவும் வகையில் இருந்தது.அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சமூக இடைவெளியை கடைபிடித்து மீன்களை வாங்கிச் செல்லும்படி பொதுமக்களிடம் கூறினர்.

அபராதம்
புதுச்சேரி பெரிய மார்க்கெட், உழவர்சந்தையில் நேற்று காலை மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு அவர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் ஒலிபெருக்கி மூலம் கொரோனா விதிகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கும், கடைக்காரர்களுக்கும் எச்சரிக்கை செய்தனர்.அப்போது முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். அத்தியாவசிய பொருள்கள் தவிர மற்ற கடைகளை திறந்து வைத்திருந்த வியாபாரிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Next Story