புதுச்சேரியில் எம்.எல்.ஏ.க்கள் பலத்தை உயர்த்தியதன் மூலம் தனித்து ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சியா? நமச்சிவாயம் எம்.எல்.ஏ. பதில்
எம்.எல்.ஏ.க்கள் பலத்தை உயர்த்தியதன் மூலம் புதுச்சேரியில் தனித்து ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறதா? என்பதற்கு நமச்சிவாயம் பதில் அளித்தார்.
கூட்டணியில் முரண்பாடு
புதுச்சேரியில் அமைச்சரவை விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கட்சியின் மேலிட அழைப்பை ஏற்று பா.ஜ.க. தலைவர்கள் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம் ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரம், அமைச்சரவையில் பங்குபெறுவது குறித்து பேசினர்.
அதன்பின் நேற்று நமச்சிவாயம் எம்.எல்.ஏ. புதுச்சேரி திரும்பினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தடை இல்லை
புதுவையில் பா.ஜ.க. - என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி எல்லா திட்டங்களையும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். பதவியேற்றதும் முதியோர் உதவித்தொகையை ரூ.500 உயர்த்தி வழங்கி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார். அதற்கு கவர்னர் ஒப்புதலும் அளித்துள்ளார்.கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கப்பட்டு அதனையும் முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்துள்ளார். மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் அனைத்து திட்டங்களும் எந்த தடையும் இல்லாமல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்
முதல்-அமைச்சர் ரங்கசாமி தொற்றால் பாதிக்கப்பட்டதால் அமைச்சரவை விரிவாக்கத்தை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. வெகு விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும். அவரது உடல்நிலை காரணமாக தான் தாமதம் ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பின் நமச்சிவாயத்திடம், பா.ஜ.க. தனது எம்.எல்.ஏ.க்கள் பலத்தை உயர்த்தியதை பயன்படுத்தி புதுவையில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகிறதே? என்று நிருபர்கள் கேட்டபோது, அந்த குற்றச்சாட்டு உண்மை அல்ல. புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடக்கும். மிகச் சிறப்பான முறையில் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story