கவுந்தப்பாடியில் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு; வெளியில் சுற்றியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் மீது வழக்கு
கவுந்தப்பாடி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது வெளியில் சுற்றியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது வெளியில் சுற்றியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து கவுந்தப்பாடி, ஓடத்துறை ஊராட்சி மற்றும் சலங்கபாளையம், பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சிகளில் கொரோனா நோய் தொற்று பரவல் குறித்தும், நோய் தொற்றை தடுக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் கொரோனா நோய் பாதிப்பு பகுதிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறதா? அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா? தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா? கொரோனா நோய் தொற்று காய்ச்சல் குறித்து கணக்கெடுக்கும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனரா? அவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் முறையாக கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனரா? எனவும் அவர் கேட்டு அறிந்தார்.
வழக்குப்பதிவு
ஆய்வின்போது ஓடத்துறை ஊராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியில் சுற்றி கொண்டிருந்ததை கலெக்டர் சி.கதிரவன் கண்டுபிடித்தார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டதுடன், அவ்வாறு சுற்றித்திரிந்தவர்களை கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கவும் அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் 7 ஆண்கள், 3 பெண்கள் மீது கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், அவர்களை கொரோனா சிகிச்சை மையத்துக்கும் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story