கவுந்தப்பாடி அருகே ஊரடங்கால் ஊர் திரும்பிய வாலிபர்கள் சுடுகாட்டை சீரமைத்தனர்


கவுந்தப்பாடி அருகே ஊரடங்கால் ஊர் திரும்பிய வாலிபர்கள் சுடுகாட்டை சீரமைத்தனர்
x
தினத்தந்தி 31 May 2021 8:57 PM GMT (Updated: 31 May 2021 8:57 PM GMT)

கவுந்தப்பாடி அருகே ஊரடங்கால் ஊர் திரும்பிய வாலிபர்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள சுடுகாட்டை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைத்தனர்.

கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே ஊரடங்கால் ஊர் திரும்பிய வாலிபர்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள சுடுகாட்டை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைத்தனர். 
ஊரடங்கு காலத்தை...
கவுந்தப்பாடி அருகே உள்ள அனந்தசாகரம் ஏரிக்கரையில் அமைந்துள்ள கிராமம் பி.மேட்டுப்பாளையம். இந்த ஊரை சேர்ந்த வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் பி.மேட்டுப்பாளையம் என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு தொடங்கி தகவல்களை பரிமாறி வந்தனர்.  இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இதன்காரணமாக வெளியூர் சென்று இருந்த இந்த கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சொந்த ஊர் திரும்பினர். 
ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசே நிறைவேற்றும் என காத்திருக்காமல் ஊரடங்கு காலத்தை பயன் உள்ளதாக மாற்ற வேண்டும் என இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் மற்றும் வாலிபர்கள் முடிவு செய்தனர்.
சீரமைப்பு
அதன்படி முதல் கட்டமாக கிராம மக்களின் பங்களிப்புடன் ஊரில் உள்ள சுடுகாட்டை சீரமைத்து சுத்தம் செய்து மரம் நட வாட்ஸ் அப் குழு உறுப்பினர்கள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் புதர் மண்டி கிடந்த சுடுகாட்டை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் சுடுகாட்டு பகுதியில் இருந்த முட்புதர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. 
ஊரடங்கு காலத்தை பயன்படுத்தும் வகையில் சுடுகாட்டை சீரமைத்த வாலிபர்களின் செயல் அந்த பகுதி பொதுமக்களின் பாராட்டை பெற்று உள்ளது.

Next Story