புதுச்சேரி மாநிலத்தில் புதிய தளர்வுகளுடன் 2-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமல்; ஒர்க்‌ஷாப், மின்சாதன விற்பனை கடைகள் திறந்திருக்கும்


புதுச்சேரி மாநிலத்தில் புதிய தளர்வுகளுடன் 2-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமல்; ஒர்க்‌ஷாப், மின்சாதன விற்பனை கடைகள் திறந்திருக்கும்
x
தினத்தந்தி 1 Jun 2021 4:44 PM IST (Updated: 1 Jun 2021 4:44 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதிய தளர்வுகளுடன் 2-ம் கட்ட ஊரடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது.

கொரோனா பரவல்

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசும், சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு எடுத்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் (ஏப்ரல்) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தொற்று பரவல் குறையாததால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்த பல்வேறு தரப்பினர் கோரிக்கைவைத்தனர். அதன்படி கடந்த 24-ந் தேதி முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது.

புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு

இந்தநிலையில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது நடைமுறையில் உள்ளபடி புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை வருகிற 7-ந் தேதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போதயை ஊரடங்கில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் நண்பகல் 12 மணி வரை செயல்படும். புதிய தளர்வுகளின்படி மின்சாரம், குடிநீர் குழாய், குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் வாகனங்களை பழுது நீக்குதல் (ஒர்க்‌ ஷாப்) போன்ற அடிப்படை சேவைகளை சுயதொழிலாக செய்பவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மின் சாதனங்கள் விற்பனை

எனவே புதுச்சேரியில் உள்ள மின் சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகள், குடிநீர் சப்ளைக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடைகள் இன்று திறக்கப்படும்.மேலும் கடைக்காரர்கள் கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அரசின் உத்தரவுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story