வாணியம்பாடி பகுதியில் ‘வாட்ஸ்-அப்’ குழு மூலம் மது விற்ற அட்மின் உள்பட 2 பேர் கைது
தினத்தந்தி செய்தி எதிரொலியாக, வாணியம்பாடி பகுதியில் வாட்ஸ்- அப் குழு மூலம் மது விற்ற குரூப் அட்மின் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி
சாராய விற்பனை அதிகரிப்பு
தமிழ் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் சாராய விற்பனை அதிகரித்திருப்பதுடன், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மது விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘சரக்கு குழு’
இந்த நிலையில் வாணியம்பாடியில் ‘சரக்கு குழு’ என்ற பெயரில் வாட்ஸ்-அப் குழு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் செயல்பட்டு வந்துள்ளனர். மேலும் இந்த குழுவுடன் தொடர்புள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வாட்ஸ்-அப் குழு மூலம் மது மற்றும் சாராயம் விற்பனை நடந்து வந்துள்ளது. வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் சாராயம் உள்பட அனைத்துமே சலுகை விலையில் கிடைத்துள்ளது.
மதுபானம் வாங்க விரும்புவோர் அவர்களுடைய வாய்ஸ் மூலம் அந்த குழுவில் பதிவு செய்வார்கள். உடனடியாக குரூப் அட்மின் மற்றும் அதில் இருப்பவர்கள் அவர்களிடம் உள்ள மதுபான பாட்டில்கள் விவரம் மற்றும் விலையை உடனடியாக வாய்ஸ் மூலம் பதிவு செய்வார்கள். பின்னர் குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து அந்த இடத்திற்கு சென்று மது பாட்டில்களை பெற்றுக் கொள்ளலாம் என குரூப் அட்மின் தெரிவிப்பார்.
அந்த குறிப்பிட்ட இடத்துக்கு சென்று மதுவகைகளை பெற்றுக்கொள்ளலாம். இதை இந்த வாட்ஸ் அப் குழுவில் உள்ள அனைவரும் பின்பற்றி வந்துள்ளனர். இவர்களை எப்படி கைது செய்வது என்று புரியாமல் காவல்துறையினர் திணறி வந்தனர்.
அட்மின் உள்பட 2 பேர் கைது
வாட்ஸ் அப் குழு மூலம் மது விற்பனை செய்வது குறித்து நேற்று தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். அவருடைய உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி ‘சரக்கு குழு’ என்ற வாட்ஸ்-அப் குழுவின் அட்மின் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் (வயது 35) மற்றும் அவரது நண்பர் நியூ டவுன் பகுதியை சேர்ந்த சரவணன் (27) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் லாரி டியூப்களில் இருசக்கர வாகனத்தில் 105 லிட்டர் சாராயத்தை கொண்டு சென்றபோது போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story