சென்னிமலையில் முக்கிய வீதிகளுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டது
சென்னிமலையில் முக்கிய வீதிகளுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டன.
சென்னிமலையில் முக்கிய பகுதிகளான பஸ் நிலையம் மற்றும் குமரன் சதுக்கம் ஆகிய இடங்களில் போலீசார் இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஊரடங்கை மீறி இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை பிடித்து அபராதம் விதிப்பதுடன், அந்த வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் போலீசாரை ஏமாற்றும் வகையில் பஸ் நிலையம் மற்றும் குமரன் சதுக்கம் வழியாக செல்லாமல் சென்னிமலை நகரில் உள்ள பல்வேறு குறுக்கு சந்துகள் வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வந்தனர். தற்போது இதனை தடுக்கும் வகையில் சென்னிமலை பேரூராட்சிக்கு உள்பட்ட பொறையன்காடு, கல்லங்காடு, அய்யப்பா நகர், காமாட்சி அம்மன் கோவில் வீதி, அருணகிரிநாதர் வீதி, சோழன் வீதி, பாண்டியன் வீதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பாதைகள் தடுப்பு மூலம் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் மற்ற பகுதியில் இருந்து இந்த பகுதிக்கு வருபவர்கள் அல்லது இந்த பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக போலீசார் கண்காணிப்பு பணியில் உள்ள பஸ் நிலையம் மற்றும் குமரன் சதுக்கம் பகுதிக்கு வந்து தான் செல்ல முடியும். இதனால் தற்போது போலீசுக்கு பயந்து யாரும் அதிகமாக வெளியே வருவதில்லை.
மேலும் போலீசாரிடம் பிடிபடுபவர்கள் பெரும்பாலும் மருந்து கடைக்கு செல்வதாக கூறி வந்ததால் சென்னிமலையில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் ஜூன் 1-ந் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும் என மருந்து கடை உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று பகல் 2 மணிக்கே அனைத்து மருந்து கடைகளும் அடைக்கப்பட்டன.
Related Tags :
Next Story