சாலையோரவாசிகள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர் தன்னார்வலர் அமைப்பினர் நடவடிக்கை


சாலையோரவாசிகள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர் தன்னார்வலர் அமைப்பினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Jun 2021 2:20 AM IST (Updated: 2 Jun 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

சாலையோர வாசிகளை முகாம்களுக்கு கொண்டு செல்ல தன்னார்வலர் அமைப்பினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் சாலையோரத்தில் வசித்து வந்தவர்களுக்கு தனியாக தன்னார்வலர் அமைப்புகளுடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் முகாம்கள் அமைத்து உள்ளது. இந்த முகாம்களில் தன்னார்வலர்கள் 3 வேளை உணவு வழங்குவதுடன் ஆதரவற்ற சாலையோரவாசிகளுக்கு மருத்துவ உதவி, மன நல உதவி மற்றும் உடற்பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்து வருகிறார்கள்.
இந்த முகாம்களில் பீடி குடிக்க முடியாது. மது அருந்த அனுமதி இல்லை என்ற கட்டுப்பாடுகள் இருப்பதால் பலரும் முகாம்களுக்கு செல்லாமல் வீதிகளிலேயே படுத்து வருகிறார்கள். இவர்களுக்கு இரக்க குணம் கொண்ட பலரும் தினசரி உணவு கொடுத்து வருகிறார்கள். சில தன்னார்வலர் அமைப்புகளும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேரத்துக்கு உணவு, நினைத்த இடத்துக்கு செல்லலாம் என்ற எண்ணத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் வீதிகளில் சுற்றிவருகிறார்கள். இந்தநிலையில் நேற்று ஒரு தன்னார்வலர் அமைப்பினர் பன்னீர்செல்வம் பூங்கா, பெரிய மாரியம்மன் கோவில், மேம்பாலம் பகுதிகளில் தங்கி இருந்த சாலையோர வாசிகளை சரக்கு ஆட்டோவில் ஏற்றி கொல்லம்பாளையம் பகுதி முகாமுக்கு அழைத்துச்சென்றனர்.
இதுபற்றி தன்னார்வலர் ஒருவர் கூறும்போது, “சாலையோரத்தில் இருந்தாலும் தினசரி உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் பலரும் முகாம்களுக்கு வராமல் ஓடி விடுகிறார்கள். கொரோனா பரவலை தடுக்கவும், இந்த சிரமமான நேரத்தில் அவர்களால் பிறருக்கும், பிறரால் அவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு விடாமல் இருக்கவும் மாநகராட்சி இந்த சிறந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. இது தெரியாமல் தன்னார்வலர்கள் பலரும் வீதிகளில் சுற்றித்திரிபவர்களுக்கு உணவு கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். இதுபோன்று வீதிகளில் உணவு கொடுக்க விரும்புபவர்கள், முகாம்களை தொடர்பு கொண்டு வழங்கினால் மிகச்சிறந்த சேவையாற்ற முடியும். அனைத்து சாலையோர வாசிகளையும் முகாம்களுக்கு கொண்டு வந்து முழுமையான சேவை செய்ய முடியும். மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு தன்னார்வலர் அமைப்புகளும் உதவ வேண்டும்” என்றார்.

Next Story