மனிதநேயம் வென்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம்: சாலையோர வாசிகளை தன்னார்வலராக மாற்றிய கொரோனா ஊரடங்கு


மனிதநேயம் வென்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம்: சாலையோர வாசிகளை தன்னார்வலராக மாற்றிய கொரோனா ஊரடங்கு
x
தினத்தந்தி 2 Jun 2021 2:29 AM IST (Updated: 2 Jun 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் சாலையோர வாசிகளை தன்னார்வலராக மாற்றிய மனிதநேயம் ஈரோட்டில் நிகழ்ந்து உள்ளது.

கொரோனா ஊரடங்கு
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பாதிப்பு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை திசை திருப்பி போட்டுவிட்டது. ஏராளமானவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் முழு ஊரடங்கு பல மாதங்கள் அமல்படுத்தப்பட்டது. அப்போது சாலையோர வாசிகளும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று தன்னார்வலர்கள் பலர் முன்வந்தார்கள். ஈரோடு மாநகர் பகுதியில் சாலையோரமாக வசித்து வந்தவர்களை தினமும் தன்னார்வலர்கள் பரிவுடன் அணுகி அவர்களுக்கு தேவையான உணவு, முக கவசம், நோய் தடுப்பு மருந்துகள் போன்றவற்றை வழங்கினார்கள். அதன்பிறகு ஆதரவற்ற அவர்களுக்கு தங்குமிடம் வேண்டும் என்று அதிகாரிகளை அணுகிய தன்னார்வலர்கள், அரசு பள்ளிக்கூடங்களில் முகாம் அமைத்து அவர்களை தங்க வைக்கவும் ஏற்பாடு செய்தார்கள். அங்கு 3 நேர உணவுகள், யோகா, சிறு தொழில் பயிற்சிகள், மனநல ஆலோசனை போன்றவை வழங்கப்பட்டது.
தன்னார்வலர்கள்
தன்னார்வலர்களின் இந்த முயற்சி பல ஆதரவற்றவர்களின் வாழ்வை மறுமலர்ச்சி அடைய வைத்துள்ளது. அட்சயம் அறக்கட்டளை சார்பில் கடந்த ஆண்டு ஈரோடு ரெயில்வேகாலனியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் முகாம் அமைத்து ஆதரவற்றவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த ஆண்டும் அதேபோல் முகாம் அமைத்து 85 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள்.
இதில் ஒரு நெகிழச்சியான சம்பவம் என்னவென்றால், கடந்த ஆண்டு ஆதரவற்றவர்களாக வந்தவர்கள் இந்த ஆண்டு ஆதரவற்றவர்களை பராமரிக்கும் தன்னார்வலர்களாக மாறியுள்ளார்கள். சாலையோரம் தானே வசிப்பவர்கள் என்று நினைக்காமல், அவர்களும் நம்மில் ஒருவராக நினைத்து காட்டப்பட்ட மனிதாபிமானம் அவர்களது வாழ்வை விளக்கேற்றி வைத்து உள்ளது. அதிலும் கவுதம், மணி ஆகியோர் கொரோனா நோயாளிகளுக்கு வழிகாட்டுவதற்காக அமைக்கப்பட்டு மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களுக்கு பதில் அளிக்கும் தன்னார்வலர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாட்டு அறை
இதுகுறித்து அட்சயம் அறக்கட்டளை நிறுவனர் நவீன்குமார் கூறியதாவது:-
யாசகர்கள் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்கிற நோக்கத்தில் சமூக பணியை தொடங்கினோம். பிச்சைக்காரர்களை தேடி சென்று அவர்களை சுத்தம் செய்து முகாமில் சேர்க்க நடவடிக்கை எடுத்தோம். நூற்றுக்கணக்கானவர்களை மீட்டு உள்ளோம். அதில் பலர் வேலைக்கு சென்று சம்பாதித்து வருவதை காணும்போது அதிக மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது ஆதரவற்றவர்களை ஒரு அரசு பள்ளியில் தங்க வைத்து பராமரித்து வந்தோம். அவர்களுக்கு யோகா, உடற்பயிற்சி போன்றன வழங்கப்பட்டது. சிலர் மது போதைக்கு அடிமையாகி இருந்ததால், மனநலம் தொடர்பான ஆலோசனையும் வழங்கினோம். அதன் பயனாக சென்னையை சேர்ந்த மணியும், கோவையை சேர்ந்த கவுதமும் ஈரோடு மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறையில் (வார் ரூம்) பணியாற்றி வருகிறார்கள்.
உணவு பரிமாறுதல்
இதேபோல் தற்போது முகாமில் உள்ள ஆதரவற்றவர்களை கடந்த ஆண்டு முகாமில் இருந்தவர்கள் தன்னார்வலர்களாக மாறி பராமரித்து வருகிறார்கள். அதில் ஈரோடு மாவட்டம் பாசூரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் முழு பொறுப்பு எடுத்து, ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குதில் இருந்து அனைத்து பணிகளையும் சிறப்பாக கவனித்து வருகிறார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த அன்பரசன் என்பவர் உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுகிறார்.
ஈரோட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர் டிரைவராக உள்ளார். அவர் எங்களது வாகனத்தை ஓட்டி செல்ல மிகவும் உதவியாக உள்ளார். முகாம் அமைப்பதற்கு முன்பு, ஒவ்வொரு பகுதியாக உணவு வினியோகம் செய்ய அவர்தான் டிரைவராக பணியாற்றினார். எனவே சாலையோரம் வசிப்பவர்களை முகாமுக்கு அழைத்து வந்து தங்க வைக்க முழு முயற்சி செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story