தடுப்பூசி போட மகளை அமெரிக்கா அனுப்ப பெற்றோர் மனு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா தடுப்பூசிபோட மகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டும் என பெற்றோர் தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்க அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
தென்மும்பையை சேர்ந்த தம்பதி விரால், பிஜால் தாக்கர். இவர்கள் தங்களது வக்கீல் மிலிந்த் சாதே மூலமாக மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கொரோனா பரவல் காரணமாக இந்தியர்கள் அமெரிக்கா வர அந்த நாடு தடைவிதித்து உள்ளது. ஆனால் அமெரிக்க குடியுரிமை உள்ளவர்கள் பயணம் செய்ய முடியும். தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எங்களது மகள் அமெரிக்க குடியுரிமை பெற்றவள். எனவே அவளை அமெரிக்கா சென்று தடுப்பூசி போட அனுமதி வழங்க வேண்டும். மேலும் அவளுடன் சித்தி புர்வி பாரிக் செல்ல வசதியாக அவரை சிறுமியின் சட்டப்படியான காப்பாளராக நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, அபய் அகுஜா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது நீதிபதிகள் மனு குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதற்கிடையே விசாரணையின் போது மாநில அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த விவகாரத்தில் மாநில அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது என கூறினார். மேலும் மனுவில் மத்திய அரசு, அமெரிக்க தூதரகத்தையும் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து மனுவில் மத்திய அரசையும் சேர்ப்பதாக பெற்றோர் தரப்பு வக்கீல் கூறினார். அதே நேரத்தில் வெளிநாட்டு தூதரகங்களை வழக்கில் சேர்க்க சட்டத்தில் இடமில்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
Related Tags :
Next Story