தமிழ் வாலிபர் கொலையில் 2 பேர் கைது பரபரப்பு தகவல்கள்
தமிழ் வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கான காரணம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
மும்பை,
மும்பை சயான் கோலிவாடா மகாடா பில்டிங்கில் வசித்து வந்தவர் தமிழ் வாலிபர் வசந்தகுமார்(வயது31). மாநகராட்சி ஊழியர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.15 மணியளவில் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீட்டின் அருகே பேசி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிசென்றனர்.
இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வடலா டி.டி. போலீசார் குற்றவாளிகளை தாராவி, சயான் உள்ளிட்ட இடங்களில் வலைவீசி தேடினர். இதில் நேற்று முன்தினம் குற்றவாளிகள் செம்பூர் பகுதியில் உள்ள விஜய் சேல்ஸ் அருகே வர உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பெயர் பாலகிருஷ்ணன்(வயது34), மர்கேஷ்(25) என்பது தெரியவந்தது.
மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. வசந்தகுமாரும், பாலகிருஷ்ணனும் ஒரே பகுதியில் வசித்து வந்து உள்ளனர். இதில் பாலகிருஷ்ணனின் நெருங்கிய உறவினர் பெண்ணை, வசந்தகுமாரின் மைத்துனர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த திருமணம் நடக்க வசந்தகுமார் தான் முக்கிய காரணம் என பாலகிருஷ்ணன் நினைத்து உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் அவர் சம்பவத்தன்று கூட்டாளி மர்கேசுடன் சேர்ந்து வசந்தகுமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்து உள்ளார். இந்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. எனினும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story