தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காததால் பொதுமக்கள் போராட்டம்
ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காததால் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் கொரோனா பாதித்தவர்கள் உள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தினந்தோறும் தண்ணீர், காய்கறி, மளிகைப்பொருட்கள் தடையின்றி கிடைக்கச்செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்.
இந்தநிலையில் ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி பாரதிபுரம் பகுதியில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு நபர்கள் வசிக்கும் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. இதனால் சுமார் 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு ஆளாகின.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத வகையிலும், வெளி நபர்கள் உள்ளே செல்லாத வகையிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. 2 நாட்களாக கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பொதுமக்கள் நேற்று காலையில் திடீர் என்று வீதியில் ஒன்று கூடினார்கள். அங்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்ட பகுதிக்கு வந்த அவர்கள் தங்களை திறந்து விடக்கோரி போராட்டம் நடத்தினார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அத்தியாவசிய பொருட்கள்
அப்போது பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3 நாட்களாக எங்கள் பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் தடை செய்யப்பட்டு உள்ளது. பால் வரவில்லை. காய்கறி உள்ளிட்ட எந்த பொருட்களும் கொண்டு வரப்படவில்லை. கொரோனா பயம் காரணமாக வழக்கமாக வரும் யாரும் இங்கு வரவில்லை. வருவதாக இருந்தாலும் தடுப்பு வேலி இருப்பதால் வர முடியாது. போலீசாரும் யாரையும் வர அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். மேலும், எங்களுக்கு தேவையான பொருட்களை வழங்க வேண்டும், இல்லை என்றால் தடுப்பு வேலியை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி உதவி ஆணையாளர் விஜயா தலைமையில் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேசி, அனைத்து பொருட்களும் சரியாக வந்து சேர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கொரோனா பரவல் ஏற்பட்டு விடக்கூடாது என்று தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடி போராட்டம் நடத்தி உள்ளனர். இதன்மூலம் கொரோனா மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சிரமப்படாத வகையில் பொருட்கள் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story