காவிரிரோடு மாநகராட்சி பள்ளிக்கூட முகாமில் முகக்கவசம், ஒயர் கூடைகள் தயாரிக்கும் பணியில் சாலையோர வாசிகள்
காவிரிரோடு மாநகராட்சி பள்ளிக்கூட முகாமில் தன்னார்வலர்கள் அளித்த கைத்தொழில் பயிற்சியின் மூலம் முகக்கவசம், ஒயர் கூடைகள் தயாரிக்கும் பணியில் சாலையோர வாசிகள் ஈடுபட்டு உள்ளனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் சாலையோரங்களில் வசித்து வந்த நூற்றுக்கணக்கானவர்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு முகாமையும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கவனித்து வருகிறார்கள். முகாம்களில் தங்கி இருக்கும் ஆதரவற்ற சாலையோர வாசிகளுக்கு தன்னார்வலர்கள் தினசரி 3 வேளை உணவு வழங்கி வருகிறார்கள். உடைகள் உள்ளிட்ட பொருட்களும் வழங்கி வருகிறார்கள்.
ஆனால் ஈரோடு காவிரிரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் அமைந்துள்ள முகாமில் சாலையோர வாசிகளுக்கு கைத்தொழில் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு முகக்கவசம், ஒயர் கூடை ஆகியவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து முகாம் பொறுப்பாளரும், கைத்தொழில் பயிற்சி அளித்தவருமான ஜீவிதம் பவுண்டேசன் அமைப்பு நிறுவனர் மனீஷா கூறியதாவது:-
முகாம்
எங்கள் அமைப்பு கடந்த கொரோனா காலத்திலேயே இதுபோன்ற முகாமை இந்த பள்ளிக்கூடத்தில் நடத்தினோம். முகாமில் தங்கி இருந்த ஒவ்வொருவருக்கும் இருந்த திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டோம். இதனால் கடந்த முறை முகாமுக்கு தேவையான உணவுகளை எங்கள் முகாமில் இருந்த சாலையோர வாசிகளே சமைக்கும் அளவுக்கு தயார் செய்தோம். பலர் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்தனர். பலர் சாலையில் வசிப்பதை விட்டு நிரந்தர வேலைகளுக்கு செல்ல தொடங்கினார்கள்.
இந்தநிலையில் 2-வது அலை தொடங்கி நிலைமை மோசமாகியபோதே சாலையோர வாசிகளுக்கு உணவுகள் வினியோகிக்க தொடங்கினோம். உடனடியாக முகாம்கள் அமைப்பதன் மூலம் சாலையோர வாசிகளை காப்பாற்ற முடியும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை வைத்தோம். அவரும், ஏற்கனவே நடந்த முகாம் அமைப்பாளர்களுக்கு அனுமதி அளித்தார். அதன்படி இந்த முகாம் தொடங்கியது. தற்போது இங்கு 70 பேர் உள்ளனர்.
முகக்கவசம் தயாரிப்பு
ஒரு வாரத்துக்கும் மேலாக அவர்கள் இங்கே இருக்கிறார்கள். தினசரி பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகிறோம். அப்போது ஒருவரிடம் பேசியபோது அவருக்கு தையல் தைக்க தெரியும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து அவருக்கு முகக்கவசம் தயாரிக்கும் பயிற்சியை வழங்க முடிவு செய்தோம். இதற்காக எங்கள் அமைப்பை சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்த தையல் எந்திரத்தை எடுத்து வந்தோம். பல இடங்களில் தேடிப்பிடித்து முகக்கவசம் தைக்க காடா துணி, எலாஸ்டிக், நூல், ஊசி உள்ளிட்ட பொருட்களை வாங்கினோம். ஆர்வம் உள்ளவர்களை அழைத்து முகக்கவசம் தயாரிக்க பயிற்சி அளித்தோம். 20 பேர் ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர். அவர்கள் இப்போது முகக்கவசங்கள் தயாரிக்க தொடங்கி உள்ளனர்.
இதுபோல் நான் ஏற்கனவே கற்றுக்கொண்ட ஒயர் கூடை பின்னும் கைத்தொழிலை 20 பேருக்கு கற்றுக்கொடுத்தேன். அவர்களும் உற்சாகமாக கூடை தயாரிப்பில் இறங்கி உள்ளார்கள். சுமார் ரூ.5 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கி உள்ளேன். இங்கு தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் முகாமில் உள்ளவர்கள் பயன்படுத்தவும், மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கவும் முடிவு செய்து இருக்கிறோம். இதுபோல் முகாமில் தங்கி இருப்பவர்கள் தயாரிக்கும் ஒயர் கூடைகளை, ஊரடங்கு முடிந்த பிறகு அவர்களை வைத்தே விற்பனை செய்து அவர்கள் ஒரு தொழில் செய்து தங்கள் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ளும் நம்பிக்கையை ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம். முகாமுக்கு வந்தபோது ஆதரவற்றவர்களாக, யாசகர்களாக, சாலையோர வாசிகளாக இருந்தவர்கள் திரும்பி செல்லும்போது சக மனிதர்களைப்போன்று நம்பிக்கையுடன் வெளியேற வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story