சென்னிமலையில் மருத்துவ காரணங்களை கூறி சென்ற 4 பேரின் கார்கள் பறிமுதல்
சென்னிமலையில் மருத்துவ காரணங்களை கூறி சென்ற 4 பேரின் கார்களை பறிமுதல் செய்து கலெக்டர் கதிரவன் நடவடிக்கை எடுத்தார்.
சென்னிமலையில் மருத்துவ காரணங்களை கூறி சென்ற 4 பேரின் கார்களை பறிமுதல் செய்து கலெக்டர் கதிரவன் நடவடிக்கை எடுத்தார்.
கலெக்டர் ஆய்வு
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று சென்னிமலைக்கு வந்தார். 1010 நெசவாளர் காலனி, பாலப்பாளையம், எம்.எஸ்.கே.நகர் மற்றும் சென்னிமலை நகரில் சோழன் வீதி ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார். அப்போது வீடுகளில் தனிமைப்படுத்தி உள்ளவர்களிடம் நோய் தொற்று தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
பின்னர் கலெக்டர் சி.கதிரவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்டுப்பாட்டு மையம்
பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதுடன் சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசரகால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் உள்ள 0424-1077, 0424-2260211 மற்றும் 9791788852 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று தொடர்பான தேவைகள் குறித்த விவரங்கள் மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு பெறலாம்.
ஆக்சிஜன் படுக்கை வசதி
ஈரோடு மாவட்டத்தில் தற்போது 10 ஆயிரத்து 490 பேர் வீட்டு தனிமையிலும், ஊரக மற்றும் நகர பகுதிகளில் 134 தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் 587 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவி ஆகிய அடிப்படை தேவைகளை கண்காணிக்க வட்டார மற்றும் கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பெருந்துறையில் உள்ள ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழுமையாக கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்துக்கு அருகே உள்ள மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக அதிக அளவில் இங்கு வருகின்றனர். அதனால் தற்போது பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 910 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 400 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
இந்த ஆய்வின்போது கலெக்டருடன் சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுசீலா மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
4 கார்கள் பறிமுதல்
முன்னதாக கலெக்டர் கதிரவன் சென்னிமலை குமரன் சதுக்கம் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த 4 கார்களை கலெக்டர் தடுத்து நிறுத்தி விசாரித்தார். இதில் அவர்கள் மருத்துவ காரணங்களுக்கு செல்வதாக கூறி, இ-பதிவை கலெக்டரிடம் காண்பித்தனர். ஆனால் கலெக்டர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 4 பேரது கார்களையும் பறிமுதல் செய்ய போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு காரை ஓட்டி வந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 அபராதம் வீதம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பா.துரைசாமி எம்.துரைசாமி மற்றும் போலீசார் சென்னிமலை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சென்ற 30 பேருக்கு தலா ரூ.500 அபராதம் வீதம் ரூ.15 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. இதுதவிர சமூக இடைவெளியை பின்பற்றாத 4 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.19 ஆயிரம் அபராதமாக விதித்தனர்.
Related Tags :
Next Story