சத்தி, பவானிசாகர் பகுதியில் ஊரடங்கு காரணமாக விவசாயிகள் பறிக்காததால் செடியிலேயே பூத்து வீணாகும் பூக்கள்


சத்தி, பவானிசாகர் பகுதியில் ஊரடங்கு காரணமாக விவசாயிகள் பறிக்காததால் செடியிலேயே பூத்து வீணாகும் பூக்கள்
x
தினத்தந்தி 3 Jun 2021 3:43 AM IST (Updated: 3 Jun 2021 3:43 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியில் ஊரடங்கு காரணமாக விவசாயிகள் பறிக்காததால் செடியிலேயே பூக்கள் பூத்து வீணாகின்றன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகரை சுற்றியுள்ள தாண்டாம்பாளையம், கெஞ்சனூர், அக்கரைதத்தப்பள்ளி, கொத்தமங்கலம், எரங்காட்டூர், பெரியகுளம், சிக்கரசம்பாளையம், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மல்லிகை, முல்லை, காக்கடா, சம்பங்கி, கோழிக்கொண்டை, கனகாம்பரம், செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை பயிரிட்டுள்ளனர்.
தினமும் இப்பகுதியில் அனைத்து பூக்களும் சேர்ந்து சுமார் 15 முதல் 20 டன் வரை விளைகின்றது. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலத்தில் உள்ள விவசாயிகள் மலர் உற்பத்தி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஏல விற்பனையில் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதுதவிர கோவை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முழு ஊரடங்கு
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 2-ம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் சத்தியமங்கலத்தில் பூ மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியில் விவசாயிகள் பூக்கள் பறிக்காத காரணத்தால் நாள்தோறும் லட்சக்கணக்கான மதிப்புள்ள பூக்கள் செடியிலேயே வீணாகிறது.
இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரணமாக நாள்தோறும் ரூ.1,000 முதல் ரூ.1 லட்சம் வரை பயிரிட்டுள்ள பூ பரப்பளவை பொறுத்து வருமானம் வந்து கொண்டிருந்தது. இதுதவிர நாள்தோறும் பூ பறிக்கும் பணியில் ஆயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது பூக்கள் பறிக்கப்படாத காரணத்தால் இவர்களும் வேலை இழந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story