மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு: கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட்
மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறினார்.
மந்திரி சபையில் ஆலோசனை
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு ெபாதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில், இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து மாநில பாடத்திட்டங்களின் கீழ் படிக்கும் மாணவர்களின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதா, நடத்துவதா என்பது குறித்து பல்வேறு மாநிலங்களும் ஆலோசித்து வருகின்றன. மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல்- மே மாதங்களில் நடத்த திட்டமிட்டு, கொரோனா 2-வது அலை காரணமாக அது தள்ளிவைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடந்தது. இதில் மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்து வெளியே வந்த கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2 நாட்களில் முடிவு
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து மந்திரி சபை கூட்டத்தில் ஆலோசித்தோம். தேர்வை நடத்துவது தொடர்பான திட்ட அறிக்கையை மாநில பேரிடர் நிர்வாக ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அந்த ஆணையத்திடம் இருந்து பதில் பெறப்படும். 2 நாட்களில் தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும். மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் தான் எங்களது முன்னுரிமை. மாணவர்களின் முன் இருப்பது 2 சவால்கள். அதில் ஒன்று பாடத்திட்டம், மற்றொன்று கொரோனா தொற்று.
மாற்றம் இல்லை
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என்ற முந்தைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பேரிடர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இது கொரோனா கால அசாதாரண சூழ்நிலை. எனவே சில அசாதாரண முடிவுகள் எடுக்க வேண்டியது உள்ளது.தேர்வை நடத்துவதற்கு நிறைய மனித வளம் தேவைப்படுகிறது. இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையேயானது மட்டுமல்ல. பள்ளிகளில் ஏற்பாடுகள், வினாத்தாள், விடைத்தாள்களை வினியோகிப்பது, பெறுவது மற்றும் வினாத்தாள் மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பல பணிகளுக்கு அதிக
மனித வளம் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டியத்தில் ஏற்கனவே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story