பெங்களூருவில் ஆன்லைன் மூலமாக இசை கருவியை விற்க முயன்று ரூ.18 ஆயிரத்தை இழந்த இளம்பெண்
பெங்களூருவில் ஆன்லைன் மூலமாக பியானோ இசை கருவியை விற்பனை செய்ய இளம்பெண் முடிவு செய்தார்.
பெங்களூரு,
பெங்களூரு ஜெயநகர் பகுதியில் பிராஜி என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவரிடம் இசை கருவியான பியானோ இருந்தது. அதனை அவர் விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக இணையதளத்திலும், ஓ.எல்.எக்ஸ்சிலும் பியானோ விற்பனைக்கு இருப்பதாக பிராஜி விளம்பரம் செய்திருந்தார். அந்த இசை கருவியின் புகைப்படத்தையும் இணையதளத்தில் அவர் வெளியிட்டு இருந்ததுடன், தன்னுடைய செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு இருந்தார். இதனை பார்த்த ஒரு மர்மநபர், பிராஜியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் ராணுவ வீரராக இருந்து வருவதாகவும், உங்களிடம் இருக்கும் பியானோ இசை கருவியை வாங்க ஆசைப்படுவதாகவும் பிராஜியிடம் அந்த நபர் தெரிவித்தார்.
பியானோ வாங்குவது குறித்து அடிக்கடி பிராஜியிடம் பேசிய அந்த நபர், தனக்கு சிறிய பிரச்சினை இருப்பதாகவும், வேறு இடத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரவேண்டிய இருப்பதாகவும் கூறினார். மேலும் தற்போது ரூ.18 ஆயிரம் கொடுத்தால், தனக்கு பணம் கிடைத்த உடனடியாக, கடனையும், பியானோவுக்கான பணத்தையும் கொடுத்து விடுவதாகவும் பிராஜியிடம் அந்த நபர் கூறியுள்ளார். இதனை நம்பிய அவரும், ரூ.18 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதன்பிறகு அந்த நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டதால், பிராஜியால் தொடா்பு கொள்ள முடியாமல் போனது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story