100 நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் தனியார் மருத்துவமனையில் போலீசார் திடீர் சோதனை
பெங்களூருவில் 100 நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினாா்கள். கூடுதல் கட்டணத்தை திரும்ப கொடுக்க கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் முறைகேட்டில் ஈடுபடுவது, கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், அதனை கண்காணிக்கவும் அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், பெங்களூரு கக்கதாசபுராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிடம் இருந்தும், பிற நோயாளிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக கிழக்கு மண்டல கண்காணிப்பு அதிகாரியும், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யான அலோக்குமாருக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து, அந்த தனியார் மருத்துவமனையில் அலோக்குமார் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது ஒவ்வொரு நோயாளியிடம் இருந்து ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக ஒரு மணிநேரத்திற்கு என்று தனியாக கட்டணம் வசூலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், கக்கதாசபுராவில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, அங்கு சோதனை நடத்தப்பட்டது. சுமார் 100 நோயாளிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலித்திருப்பது தெரியவந்துள்ளது. அதுபற்றி விளக்கம் அளிக்கும்படி அந்த தனியார் மருத்துவமனைக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நோயாளிகளிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை உடனடியாக, சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு திரும்ப வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு கூடுதல் கட்டணத்தை கொடுக்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story