திருச்சிற்றம்பலத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மீண்டும் விற்பனையா? அதிகாரிகள் விசாரணை


திருச்சிற்றம்பலத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மீண்டும் விற்பனையா? அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 3 Jun 2021 10:17 PM IST (Updated: 3 Jun 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

திருச்சிற்றம்பலத்தில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மீண்டும் விற்பனை செய்யப்பட்டதா? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சிற்றம்பலம், 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. தஞ்ைச மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல் சரக பகுதியில் ஏராளமானோர் ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பாக மது பாட்டில்களை வாங்கி ஊரடங்கு காலத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கு பதுக்கி வைத்திருந்தனர்.

அவ்வாறு பதுக்கி வைக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை திருச்சிற்றம்பலம் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் வைத்து இருந்தனர். இந்த மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இது பற்றிய தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் மற்றும் அதிகாரிகள் திருச்சிற்றம்பலம் போலீசாரை அழைத்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மீண்டும் விற்பனை செய்யப்பட்டதா? என தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தின்போது திருச்சிற்றம்பலம் போலீசார் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதை கண்டறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள், 3 போலீசாரை திருச்சிற்றம்பலத்தில் இருந்து அதிரடியாக இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு காலத்தில் போலீசாரின் சேவை பாராட்டக்கூடிய வகையில் இருந்தாலும் ஒரு சில இடங்களில் போலீசார் செய்யும் அத்துமீறிய செயல்களால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுகிறது. இது காவல்துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகளையும் வேதனைப்பட செய்கிறது. எனவே இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட போலீசாரை உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணை செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story