ஈரோடு மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் கொரோனா பாதிப்பில் பவானி ஊராட்சி ஒன்றியம் முதலிடம்


ஈரோடு மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் கொரோனா பாதிப்பில் பவானி ஊராட்சி ஒன்றியம் முதலிடம்
x
தினத்தந்தி 4 Jun 2021 2:19 AM IST (Updated: 4 Jun 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் கொரோனா பாதிப்பில் பவானி ஊராட்சி ஒன்றியம் முதலிடத்தில் உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் கொரோனா பாதிப்பில் பவானி ஊராட்சி ஒன்றியம் முதலிடத்தில் உள்ளது.
தொடர்ந்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து உள்ளது. அதேநேரத்தில் மொத்த பலி எண்ணிக்கையும் 400 -ஐ நெருங்கிவிட்டது. மாவட்டத்தில் மாநகர் மற்றும் நகர பகுதிகளை விட தற்போது கிராமப்புற பகுதிகளில் தான் அதிக தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நகர பகுதிகளில் முக்கிய ரோடுகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து மிகவும் குறைந்து காணப்படுகின்றது.
ஆனால் கிராமப்புறங்களில் விவசாய கூலி பணிகளுக்கு செல்வது, பொது இடங்களில் கூட்டமாக அமர்ந்து பேசுவது, முக கவசம் அணியாமல் இருப்பது போன்ற காரணங்களால் தொற்று பரவல் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
பவானி ஊராட்சி ஒன்றியம்
இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக கிராமப்புறங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு, வெளி ஆட்கள் உள்ளே வராத வகையிலும், உள்ளே இருப்பவர்கள் கிராமங்களை விட்டு வெளியே செல்லாமல் இருக்கவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. நேற்று முன்தினம் நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 1,488 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் 559 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஊரக பகுதிகளில் தொற்று பாதிப்பில் பவானி ஊராட்சி ஒன்றியம் முதலிடத்தை பெற்றுள்ளது. அதாவது இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மட்டும் 248 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு அடுத்த படியாக பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 127 பேரும், மொடக்குறிச்சியில் 113 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா ஊரடங்கு
இதேபோல் கொரோனா தொற்று பாதிப்பில் மிகவும் குறைவாக இருப்பது தாளவாடி ஊராட்சி ஒன்றியம். நேற்று முன்தினம் நிலவரப்படி இந்த ஊராட்சி ஒன்றியத்தில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. இதற்கு அடுத்தபடியாக பவானிசாகரில் 7 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story