அனுமதி பெறாமல் அத்தியாவசிய பொருட்களை விற்றால் உரிமம் ரத்து; கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை


அனுமதி பெறாமல் அத்தியாவசிய பொருட்களை விற்றால் உரிமம் ரத்து; கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Jun 2021 2:29 AM IST (Updated: 4 Jun 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

அனுமதி பெறாமல் அத்தியாவசிய பொருட்களை விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஈரோடு
அனுமதி பெறாமல் அத்தியாவசிய பொருட்களை விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர்  கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
வியாபாரிகளுக்கு அனுமதி
ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை வாகனங்கள் மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சில்லரை வியாபாரிகள் மளிகை பொருட்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சிறு வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலமாக விற்பனை செய்யலாம். இதற்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேற்படி சில்லரை வியாபாரிகளுக்கு தேவையான மளிகை பொருட்களை மொத்த வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் வகையில் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டும் மொத்த வியாபார கடைகளை திறந்து வைக்க உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கொள்ளலாம்.
அதன்படி ஈரோடு மாநகர் பகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரிடமும், நகராட்சி பகுதிகளுக்கு நகராட்சி ஆணையாளர்களிடமும், பேரூராட்சி பகுதிகளுக்கு பேரூராட்சி செயல் அதிகாரிகளிடமும், ஊராட்சி பகுதிகளுக்கு வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடமும் அனுமதி பெறலாம்.
உரிமம் ரத்து
மொத்த வியாபாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கடைகளை திறந்து வைத்திருக்க வேண்டும். உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்ற சில்லரை வியாபாரிகளுக்கு மட்டுமே மளிகை பொருட்கள் வழங்கப்பட வேண்டும். வியாபார நேரத்தில் கண்டிப்பாக தமிழக அரசின் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
அனுமதி பெறாத சில்லரை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் வியாபாரம் செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், அனுமதி பெற்ற சில்லரை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மளிகைப்பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, தமிழக அரசின் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்தாலோ பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், தற்போது வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர்  கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Next Story