மராட்டியத்தில் 18 மாவட்டங்களில் முழு தளர்வுகளா? மந்திரி விஜய் வடேடிவார் அறிவிப்பை மறுத்தார், உத்தவ் தாக்கரே


மராட்டியத்தில் 18 மாவட்டங்களில் முழு தளர்வுகளா? மந்திரி விஜய் வடேடிவார் அறிவிப்பை மறுத்தார், உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 4 Jun 2021 3:07 PM IST (Updated: 4 Jun 2021 3:07 PM IST)
t-max-icont-min-icon

18 மாவட்டங்களில் முழுமையான தளர்வுகள் செய்யப்பட்டதாக மந்திரி விஜய் வடேடிவார் வெளியிட்ட அறிவிப்பை, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மறுத்து விட்டார்.

முழு தளர்வு அறிவிப்பு
மராட்டியத்தில் மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் கொரோனா 5 சதவீதம் அல்லது அதற்கு கீழ் குறைந்த 18 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விலக்கி கொள்ளப்பட இருப்பதாகவும், இது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை மந்திரி விஜய் வடேடிவார் கூறினார்.கட்டுப்பாடுகள் விலக்கி ெகாள்ளப்பட்ட அந்த மாவட்டங்கள் தானே, நாசிக், அவுரங்காபாத், பந்தாரா, புல்தானா, சந்திராப்பூர், துலே, கட்சிரோலி, கோண்டியா, ஜல்காவ், ஜல்னா, லாத்தூர், நாக்பூர், நாந்தெட், யவத்மால், வாசிம், வார்தா, பர்பானி ஆகியவை என்றும் அவர் கூறினார்.

மறுத்த முதல்-மந்திரி
மந்திரியின் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் முதல்-மந்திரி அலுவலகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, எந்த மாவட்டத்திலும் முழுமையான தளர்வுகளை செய்யவில்லை, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் ெதாடரும் என்று குறிப்பிட்டு இருந்தார்.இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் இதுபற்றி மந்திரி விஜய் வடேடிவாரிடம் நிருபர்கள் கேட்டபோது, 18 மாவட்டங்களில் தளர்வுகள் தொடர்பாக முதல்-மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டது, ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை 
என்று மழுப்பலாக பதிலளித்து விட்டார்.

சலசலப்பு
அரசின் முக்கிய முடிவுகளை முதல்-மந்திரி தான் அறிவிக்க வேண்டும் என்று சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் மந்திரிகளை காங்கிரஸ் கண்டித்து இருந்தது. இந்தநிலையில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் தொடர்பாக காங்கிரஸ் மூத்த மந்திரியான விஜய் வடேடிவார் வெளியிட்ட அறிவிப்பும், அதை முதல்-மந்திரி மறுத்ததும் கூட்டணி கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story