மேற்கு வங்காளத்தை ஆணவத்தின் புயல் இன்னும் சுற்றுகிறது; மத்திய அரசு மீது சிவசேனா தாக்கு
ஆணவத்தின் புயல் இன்னும் மேற்கு வங்காளத்தில் சுற்றுவதாக கூறி மத்திய அரசை சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது.
முதல்-மந்திரியின் தாமதம்
‘யாஸ்’ புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் பயணம் மேற்கொண்டார்.அப்போது மேற்குவங்கத்தில் முதல்-மந்திரி மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த கூட்டத்திற்கு மம்தா பானர்ஜி அரைமணி நேரம் தாமதமாக வந்தார். அதுவரை பிரதமர் மோடி மற்றும் கவர்னர் ஜெகதீப் தன்கர் காத்திருந்தனர்.மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளராக இருந்த அலபன் பந்தோபாத்யாவும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என தெரிகிறது.இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை மத்திய அரசு டெல்லிக்கு இடமாற்றம் செய்தது. ஆனால் அவரை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைக்க முடியாது என முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். மேலும் அவரின் ராஜினாமாவை பெற்றுக்கொண்டு தனது ஆலோசகராக நியமித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அதிரடியாக உத்தரவிட்டார்.
நோட்டீஸ்
இந்தநிலையில் யாஸ் புயல் தொடர்பான பிரதமர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என அலபன் பந்தோபாத்யாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இதனால் இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது.
இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
அதிகாரிகள் பாதிப்பு
வங்கத்தை தாக்கிய யாஸ் புயல் வந்து ஓய்ந்துவிட்டது. ஆனால் ஆணவத்தின் சூறாவளி இன்னும் வங்காளத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறது.புயல் தொடர்பான முதல்-மந்திரியின் மற்றொரு கூட்டத்தில் கலந்துகொண்டதால் அலபன் பந்தோபாத்யாவால் பிரதமரின் கூட்டத்திற்கு வர முடியவில்லை. அவர் வங்காள அரசின் அதிகாரி. அவர் முதல்-மந்திரியின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டியது கடமை.தனது மாநில முதல்-மந்திரியின் உத்தரவை பின்பற்றிய அதிகாரி எப்படி குற்றவாளியாக இருக்க முடியும்? அவர் உத்தரவை மீறி பிரதமரின் கூட்டத்தில் கலந்துகொண்டு இருந்தாலும் அவர் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும்.இத்தகைய அதிகார சண்டையில் அதிகாரிகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.
மத்திய அரசின் தவறு
மாநில அரசு மீது மத்திய அரசு அழுத்தம் கொடுப்பது தவறு. நாம் கூட்டாட்சி அமைப்பில் உள்ளோம். மத்திய அரசின் சித்தாந்தத்தை கடைப்பிடிக்காத மாநில அரசை அவமானப்படுத்துவது தவறு.அலபன் பந்தோபாத்யாவை தண்டிப்பதன் மூலம் மம்தாவுக்கு பாடம் கற்பிக்க மத்திய அரசு விரும்புகிறது. இது நாட்டின் அதிகாரிகளுக்கான அச்சுறுத்தல். ஆணவத்தின் உச்சம்.அரசியல் வெற்றி, தோல்விகளில் மத்திய அரசு பரந்த பார்வையை கொண்டிருக்க வேண்டும்.முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், நரசிம்மராவ், ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்றவர்கள் தங்கள் ஆட்சிகாலங்களில் மாநிலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இணக்கமாவும் நீண்டகால நோக்குடனும் தீர்த்துவைக்கப்பட்டது.மாநிலங்களுக்கு அவர்கள் கோரியதை விட அதிகமாக வழங்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story