ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை; ஆணையாளர் நேரில் ஆய்வு
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் வீடு வீடாக நடந்து வரும் காய்ச்சல் பரிசோதனை பணிகளை ஆணையாளர் எம்.இளங்கோவன் நேரில் ஆய்வு செய்தார்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் வீடு வீடாக நடந்து வரும் காய்ச்சல் பரிசோதனை பணிகளை ஆணையாளர் எம்.இளங்கோவன் நேரில் ஆய்வு செய்தார்.
களப்பணியாளர்கள்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
எனவே மாநகராட்சியின் 60 வார்டு பகுதிகளிலும் ஆசிரியர்கள், களப்பணியாளர்கள் காய்ச்சல் பரிசோதனை மற்றும் புள்ளிவிவர சேகரிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அதன்படி கடந்த ஒரு வார காலமாக ஆசிரியர்கள், களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று புள்ளிவிவரங்கள் சேகரித்தனர். கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் பணியாற்றுவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ய பரிசோதனை கருவியும் வழங்கப்பட்டு உள்ளது.
அவர்கள் வீடு வீடாக சென்று அங்கு குடியிருப்பவர்கள் பெயர்கள், செல்போன் எண் ஆகியவற்றை பெற்று, காய்ச்சல் பரிசோதனை செய்து வருகிறார்கள்.
ஆணையாளர்
இந்த பணிகளை ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
சம்பத் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் களப்பணியாளர்கள் பணியில் இருந்தபோது ஆணையாளர் இந்த ஆய்வுப்பணியில் ஈடுபட்டு புள்ளிவிவரங்களை சரிபார்த்தார்.
இதுபோல் மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் பெரியவலசு திலகர் வீதியில் நடந்த கள ஆய்வுப்பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணியில் இருந்த ஆசிரியர் தாமஸ் ஆண்டனி, மேற்பார்வையாளர் இளங்கவி ஆகியோரிடம் புள்ளிவிவர சேகரிப்பில் கிடைத்த தகவல்கள் குறித்து கேட்டு அறிந்தார்.
காய்ச்சல் பரிசோதனை
ஆசிரியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் தினசரி சுமார் 100 முதல் 150 வீடுகள் வரை நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் வீடுகளில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் சளி பாதிப்பு இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்து பதிவு செய்கிறார்கள்.
அதுமட்டுமின்றி அவர்கள் செல்லும் பகுதியில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களின் உடல் நிலை உள்ளிட்ட விவரங்கள் குறித்து தனியாக குறிப்புகள் எழுதி மாநகராட்சிக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மறு அறிவிப்பு வரும்வரை தொடர்ச்சியாக வீடுகள் சந்திக்கப்பட்டு காய்ச்சல் கண்டறியும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story