பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்: குழப்பத்தில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள்; முடிவினை விரைவாக அறிவிக்க கோரிக்கை


பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்: குழப்பத்தில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள்; முடிவினை விரைவாக அறிவிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 5 Jun 2021 2:39 AM IST (Updated: 5 Jun 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் குழப்பத்தை தீர்க்க விரைவாக முடிவு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

ஈரோடு
பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் குழப்பத்தை தீர்க்க விரைவாக முடிவு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
பிளஸ்-2 தேர்வு
கொரோனா நோயின் தீவிரத்தால் தமிழ்நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முழு அடைப்புக்கு முன்னதாகவே பள்ளிக்கூடங்கள் அடைக்கப்பட்டன. 2020-2021-ம் கல்வி ஆண்டில் ஒரு சில மாதங்கள் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும், அதைத்தொடர்ந்து 9, 10, 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் மட்டும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. பின்னர் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் முழுமையாக மூடப்பட்டன. தேர்தலை முன்னிட்டு 10-ம் வகுப்பு வரை அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது.
அதை அடியொற்றி தற்போது 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக கல்வித்துறை அதிகாரி அறிவித்து இருக்கிறார். 10-ம் வகுப்புக்கு மதிப்பெண் அளிப்பதில் சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருந்தாலும், இப்போது 12-ம் வகுப்புக்கு அதாவது பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளின் நிலை என்ன என்பதுதான்.
குழப்பம்
மத்திய அரசு சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து என்று அறிவித்து விட்டது. ஆனால் தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு நடைபெறும். அதற்காக முடிவை அறிவிப்போம் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் உயர் கல்வி வாய்ப்புகள் அளிக்கப்படும் என்ற உறுதியான கொள்கை இருப்பதால் கண்டிப்பாக தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், அதுபற்றிய முடிவு இன்னும் முறையாக அறிவிக்கப்படாததால் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
முடிவு அறிவிப்பு
இதுபற்றி பெயர் கூற விரும்பாத கல்வியாளர் ஒருவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இந்த கல்வி ஆண்டில் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுத தயார் நிலையில் இருக்கிறார்கள். தற்போது இந்த 8 லட்சம் மாணவர்களின் குடும்பங்களும் தேர்வு குறித்த அறிவிப்பினை எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஒரு வேளை தேர்வு நடத்தும் முடிவு இல்லை என்றால் அதை தொடக்கத்திலேயே அறிவித்து விடலாம். மாணவ-மாணவிகள், பெற்றோர் மற்றும் அவர்களின் ஆசிரியர்கள் அடுத்த கட்டம் என்ன என்பதை நோக்கி சிந்தனையை செலுத்துவோம். ஆனால், எதைப்பற்றியும் சிந்திக்க முடியாத ஒரு எதிர்கால கேள்விச்சுமை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு உள்ளது.
கொரோனா பரிசோதனை
தேர்வு நடத்துவது என்றாலும் அதை பாதுகாப்பாக விரைவாக நடத்த முடிவு செய்ய வேண்டும். 15 நாட்களுக்கு முன்னதாக தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து மாணவ-மாணவிகள் அவர்களுடன் இருக்கும் பெற்றோர் மற்றும் பாடம் எடுக்கும், தேர்வு நடத்தும் மற்றும் தேர்வு அறை கண்காணிக்கும் ஆசிரியர்கள், தேர்வுக்கூட பணியாளர்கள், பள்ளிக்கூட நிர்வாகிகள் என்று அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து, அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் அவர்களை பாதுகாக்க முடியும்.
வெளியூர்களில் இருக்கும் மாணவ-மாணவிகள் அந்தந்த இடங்களிலேயே கொரோனா பரிசோதனை செய்து, அதன் முடிவுகளுடன் பள்ளிக்கூடங்களுக்கு வரவழைக்கப்பட்டு விடுதிகளில் தங்க வைக்கலாம். அரசு பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை அந்தந்த சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள்தான் படிப்பார்கள் என்பதால் அவர்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் இருக்காது.
பாதுகாப்பு
தேர்வு மையங்களை அந்தந்த பள்ளிக்கூடங்களிலேயே அமைத்து, அந்த பள்ளிக்கூடங்களின் அனைத்து அறைகளையும் தேர்வு அறைகளாக மாற்றி, அனைத்து ஆசிரிய-ஆசிரியைகளையும் தேர்வு அறை கண்காணிப்பாளராக பணியாற்ற செய்யலாம். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி தேர்வுகள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. மற்ற பாடங்கள் தனித்தனியாக நடத்தப்படுவதால் தேர்வு நாட்கள் அதிகமாகின்றன. ஆனால் ஒவ்வொரு பிரிவுக்கும் மொத்தம் 6 தேர்வுகள் மட்டுமே நடக்கும். எனவே அடுத்தடுத்து விடுமுறைகள் இல்லாமல் தொடர்ச்சியாக 6 நாட்களில் தேர்வினை முடிக்க முடியும். இந்த 6 நாட்களும் மாணவ-மாணவிகளை பாதுகாப்பது முடியும். எனவே இதுகுறித்து கல்வியாளர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினருடனும் ஆலோசனை செய்து தேர்வினை பாதுகாப்பாக நடத்த தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும். பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் உயர் கல்வி வாய்ப்பினை தமிழக மாணவ-மாணவிகள் அடைய, அவர்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும், பாதுகாப்பையும் வழங்க தமிழக கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story