கர்நாடகாவில் இருந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா?; பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தீவிர சோதனை


கர்நாடகாவில் இருந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா?; பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 5 Jun 2021 3:02 AM IST (Updated: 5 Jun 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இருந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா? என பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சத்தியமங்கலம்
கர்நாடகாவில்  இருந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா? என பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 
அதிக விலைக்கு...
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பால், மருந்து கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. 
மேலும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலமாக வீதி வீதியாக சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் தமிழக மது பிரியர்களை குறிவைத்து அண்டை மாநிலமான கர்நாடகத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ரகசிய தகவல்
ஏற்கனவே கர்நாடகத்தில் இருந்து வாகனங்கள் மற்றும் ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களில் மதுபாட்டில்கள் கடத்தியதாக 8-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 500-க்கும் மேற்பட்ட கர்நாடக மாநில மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு காய்கறி, மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களில் கர்நாடக மாநில மது பாட்டில்களை  பதுக்கி வைத்து கடத்தி வருவதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன. 
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் தமிழக- கர்நாடக எல்லைகளில் உள்ள தாளவாடி, ஆசனூர், பண்ணாரி சோதனை சாவடி வழியாக மது பாட்டில்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வாகனங்களில் கடத்தி வரப்படுகிறதா?  என்பதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையாவுக்கு உத்தரவிட்டார்.
சோதனை 
அவருடைய உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறிகள்  மற்றும் உணவு பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அதில் உள்ள சரக்குகளை கீழே இறக்கி மதுபாட்டில்கள் பதுக்கி கொண்டு வரப்பட்டு உள்ளனவா? என சோதனையிட்டு பின்னர் அனுப்பி வைத்தனர்.

Next Story