முழு ஊரடங்கால் மாமல்லபுரத்தில் தேங்கி கிடக்கும் கற்சிற்பங்கள்


முழு ஊரடங்கால் மாமல்லபுரத்தில் தேங்கி கிடக்கும் கற்சிற்பங்கள்
x
தினத்தந்தி 5 Jun 2021 6:27 AM IST (Updated: 5 Jun 2021 6:27 AM IST)
t-max-icont-min-icon

சிற்ப கலைக்கு பெயர் பெற்ற மாமல்லபுரத்தில் முழு ஊரடங்கால் விற்பனை ஆகாமல் ஆயிரக்கணக்கான கற்சிற்பங்கள் தேங்கி கிடக்கின்றன.

மாமல்லபுரம்,

கொரோனா தொற்று 2-வது அலை பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சர்வதேச சுற்றுலா நகரமாகவும், சிற்பக்கலை தொழிலின் உற்பத்தி நகரமான மாமல்லபுரத்தில் 500-க்கும். மேற்பட்ட சிற்பக்கலைகூடங்கள் இயங்கி வருகின்றன. தற்போது முழு ஊரடங்கால் இந்த கற்சிற்பக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த கற்சிற்ப கூடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கற்சிற்ப தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இங்கு வடிக்கப்படும் கற்சிற்பங்கள் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஜெர்மன், இஙகிலாந்து உள்பட பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. அங்குள்ள கோவில்களையும், அருங்காட்சியங்களையும், பூங்காக்களையும் மாமல்லபுரம் சிற்பங்களே அலங்கரிக்கின்றன. குறிப்பாக சாமி சிலைகள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களின் சிலைகளும் இங்கு வடிக்கப்படுகின்றன.

சிற்பங்கள் தேக்கம்

இங்குள்ள ஒவ்வொரு சிற்பக்கலைக்கூடத்திலும் ஆர்டரின் பேரிலும், சுற்றுலா வரும் பயணிகள் வாங்கி செல்வதற்காகவும், கோவில் திருப்பணிக்காகவும் சிற்பங்கள் வடித்து விற்பனைக்கு வைப்பதுண்டு. கடந்த ஆண்டு ஊரடங்கால் பாதிக்கப்பட்டு சிற்பிகள் படிப்படியாக மீண்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முழு ஊரடங்கால் மொத்தமாக சிற்பகலை கூடங்கள் முடங்கி கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. இங்கு பெரும்பாலான சிற்ப கூடங்கள் மூடப்பட்டதால் அந்த பகுதிகள் உளி சத்தமின்றி களையிழந்து வெறிச்சோடி காணப்படுகின்றன. கற்சிற்ப உற்பத்தியும் மொத்தமாக முடங்கி போய் உள்ளன. சிற்ப கூட உரிமையாளர்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்து வடித்த சிலைகள் சம்மந்தப்பட்ட கோவில்களுக்கு அனுப்ப முடியாமலும் தேங்கி உள்ளதை பல சிற்பக்கலைக்கூடங்களில் காணமுடிகிறது. 1 அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரை உள்ள சிற்பங்களை பாதுகாக்கவே சிற்பிகள் இரவு, பகலாக கண்விழித்து தங்களுடைய ஒவ்வொரு சிற்பத்தையும் விழிப்புணர்வுவோடு பாதுகாத்து வருவதை காண முடிகிறது.

தாங்கள் வடிவமைத்து தேங்கி உள்ள சிற்பங்களை வைத்து கொண்டு என்ன செய்வது என்று திக்கற்ற நிலையில் ஒவ்வொரு சிற்ப கலைஞர்களும் பரிதவித்து வருவதை இங்கு காண முடிகிறது. தங்களுக்கு அரசு வங்கி கடன் தள்ளுபடி, சிற்ப தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசிடம் வைத்துள்ளனர்.

Next Story