அஜித் பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது தவறு தான்; மனம் திறந்த தேவேந்திர பட்னாவிஸ்


அஜித் பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது தவறு தான்; மனம் திறந்த தேவேந்திர பட்னாவிஸ்
x
தினத்தந்தி 5 Jun 2021 3:06 PM IST (Updated: 5 Jun 2021 3:06 PM IST)
t-max-icont-min-icon

அஜித்பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது தவறு தான் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

அஜித்பவாருடன் ஆட்சி
மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இந்தநிலையில் தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்ளும் விவகாரத்தில் 2 கட்சிகள் இடையேயும் மோதல் வெடித்தது. இதையடுத்து 25 ஆண்டுகால கூட்டணியை விட்டு வெளியேறி சிவசேனா கொள்ளைகள் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது.இதையடுத்து இந்த கூட்டணியில் அப்போது அதிருப்தியில் இருந்த அஜித்பவாரை தன் பக்கம் இழுத்த பட்னாவிஸ், அவருடன் சேர்ந்து 2019-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி அதிகாலையில் ஆட்சி அமைத்தார். ராஜ்பவனில் நடந்த விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். எனினும் அஜித்பவாருக்கு தேசியவாத காங்கிரசில் போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் இந்த ஆட்சி 80 மணி நேரத்தில் கவிழ்ந்தது. பின்னர் 
அஜித்பவார் சமாதானம் ஆகி சிவசேனா கூட்டணியில் சேர்ந்து கொண்டார். மீண்டும் துணை முதல்-மந்திரி ஆனார்.

தவறு தான், வருத்தமில்லை
இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து ஆன்லைனில் நடந்த நேர்காணலில் தேவேந்திர பட்னாவிஸ் மனம் திறந்து உள்ளார். இதில் அவர் அஜித்பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது தவறுதான் என மனம் திறந்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அஜித்பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது தவறு தான். நீங்கள் முதுகில் குத்தும் போது (கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது), அரசியலில் பிழைத்து இருப்பது முக்கியம். அரசியலில் நிலைத்து இருக்க எதையெல்லாம் செய்ய முடியுமோ செய்யலாம். எனவே நீங்கள் முதுகில் குத்தும் போது, அதற்கு சரியான பதிலடியை கொடுக்க வேண்டும். அஜித்பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது என்பது கோபம் உள்ளிட்ட பல உணர்வுகளினால் உருவானது. வாய்ப்பு உருவான போது, அதை பயன்படுத்தி கொண்டோம். ஆனால் நாங்கள் செய்தது எங்கள் ஆதரவாளர்கள், பா.ஜனதாவினருக்கே 
பிடிக்கவில்லை. அந்த செயலால் எங்கள் பெயர் கெட்டுப்போனது என்பதை ஒத்து கொள்கிறேன். நாங்கள் அதை செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் அது தான் சரியென நினைத்தேன். பிறகு அது தவறு என நினைத்தாலும், அதற்காக வருத்தப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story