பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது; கருப்பு பூஞ்சை அறுவை சிகிச்சை கட்டணம் நிர்ணயம்: மராட்டிய அரசு அறிவிப்பு


பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது; கருப்பு பூஞ்சை அறுவை சிகிச்சை கட்டணம் நிர்ணயம்: மராட்டிய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Jun 2021 3:28 PM IST (Updated: 5 Jun 2021 3:28 PM IST)
t-max-icont-min-icon

கருப்பு பூஞ்சை நோய் பாதித்தவர்களுக்கு அறுவை சிகிச்சை கட்டணத்தை அரசு நிர்ணயித்து உள்ளது.

கட்டணம்
கொரோனா கோரப்பிடி படிப்படியாக தளர்ந்து வருகிறது. இருப்பினும் புதிய தலைவலியாக மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதுவரை மராட்டியத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரம் பேரை கடந்து உள்ளது.இந்தநிலையில் தனியார் ஆஸ்பத்திரிகள் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த மாநில கட்டண நிர்ணயம் செய்துள்ளது.இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

குறைந்தபட்ச கட்டணம்
கருப்புபூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க 28 வகையான அறுவை சிகிச்சைகளை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது. குறிப்பிட்ட 3 நகரங்களில் குறைந்தபட்ச அறுவை சிகிச்சை கட்டணம் ரூ.6 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.சிகிச்சைக்கு சிக்கலான தன்மையை பொறுத்து கட்டணம் ரூ.1 லட்சம் வரை உயரக்கூடும். இந்த கட்டணம் ஜூலை 31-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும். சிகிச்சை பெறும் பகுதியை பொருத்தும், சிகிச்சை வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சூப்பர் பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள்

பொது சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மும்பை, புனே, நாக்பூர் போன்ற மெட்ரோ நகரங்களில் சில சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள் உள்ளன.இந்த ஆஸ்பத்திரிகளில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மூளை, மூக்கு, கண், காது மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். ஒரு நோயாளி இத்தகைய ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற விரும்பினால் அங்கு விதிக்கப்படும் அதிகப்படியான கட்டணம் பெரும் தடையாக உள்ளது. அரசின் இந்த அறிவிப்பு காரணமாக நோயாளிகள் இதுபோன்ற ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story