வங்காளதேச இளம்பெண் கூட்டு கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேர் கைது
பெங்களூருவில், வங்காளதேச இளம்பெண் கூட்டாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு,
பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த வங்காளதேச நாட்டு இளம்பெண் கூட்டாக கற்பழிக்கப்பட்டு இருந்தார். மேலும் இளம்பெண்ணின் மர்ம உறுப்பில் மதுபாட்டிலால் ஒரு கும்பல் கொடூரமாக தாக்கி இருந்தார்கள். இதுகுறித்து ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 2 பெண்கள் உள்பட 10 பேரை ராமமூர்த்திநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கி இருந்ததும் தெரிந்தது. அத்துடன் கைதானவர்களில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டு இருந்தனர். பணப்பிரச்சினை மற்றும் விபசார தொழில் செய்வது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டு, கொடூர தாக்குதலுக்கு உள்ளானதும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் மேலும் சிலர் தலைமறைவாக இருப்பது பற்றி ராமமூர்த்திநகர் போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், இளம்பெண் கற்பழிப்பு வழக்கு தொடர்புடையதாக வங்காளதேச நாட்டை சேர்ந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர் ஜமால் மற்றும் அஜீம் என்று தெரியவந்தது. இளம்பெண் கற்பழிக்கப்படும் வீடியோ வெளியானதும், பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு 2 பேரும் தப்பி சென்றிருந்தனர்.
அங்கிருந்து வங்காளதேசத்திற்கு செல்வதற்காக ஜமால், அஜீம் திட்டமிட்டு இருந்தனர். இதுபற்றி அறிந்த ராமமூர்த்திநகர் போலீசாா், மேற்கு வங்காளத்திற்கு சென்று 2 பேரையும் கைது செய்திருந்தனர். கைதான 2 பேர் மீதும் ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story