மாநில அரசு கொள்முதல் செய்த தடுப்பூசிகளை தனியாருக்கு விற்பதாக பஞ்சாப் அரசு மீது குற்றச்சாட்டு விசாரணைக்கு உத்தரவு


மாநில அரசு கொள்முதல் செய்த தடுப்பூசிகளை தனியாருக்கு விற்பதாக பஞ்சாப் அரசு மீது குற்றச்சாட்டு விசாரணைக்கு உத்தரவு
x
தினத்தந்தி 5 Jun 2021 9:58 PM IST (Updated: 5 Jun 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப்பில் மாநில அரசு கொள்முதல் செய்த தடுப்பூசியை தனியாருக்கு விற்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.

சண்டிகர், 

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க பஞ்சாப் அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தனியாருக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதளம் ஆளும் காங்கிரஸ் அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநிலத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆனால் மாநில அரசோ பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை வழங்குவதற்கு பதிலாக, அவற்றை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறது.

அந்தவகையில் ஒரு டோஸ் கோவேக்சின் தடுப்பூசியை ரூ.400-க்கு கொள்முதல் செய்து, தனியார் நிறுவனங்களுக்கு ரூ.1,060-க்கு விற்பனை செய்கிறது. இதை தனியார் ஆஸ்பத்திரிகள் ஒரு டோசுக்கு ரூ.1,560-க்கு பொதுமக்களுக்கு போட்டு வருகின்றன.

இதில் மொகாலியில் மட்டுமே 35 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் தனியாருக்கு விற்கப்பட்டு உள்ளன. இதனால் ஒரே நாளில் ரூ.2 கோடி மாநில அரசுக்கு கிடைத்துள்ளது.

தடுப்பூசி விற்பனை மூலம் லாபம் பார்க்கும் காங்கிரஸ் அரசின் இத்தகைய செயல் ஒழுக்கக்கேடானது. பொருளாதார மந்தநிலை நீடித்து வரும் இந்த காலத்தில் மக்களை அரசு தண்டிக்கிறது.

தடுப்பூசிக்கு செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தை ஐகோர்ட்டு மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்தார்.

இதைப்போல பஞ்சாப்பில் தடுப்பூசி மாபியா செயல்பட்டு வருவதாக மாநில முன்னாள் துணை சபாநாயகர் பிர் தேவிந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக மாநில சுகாதார மந்திரி பல்பிர் சிங் சித்து ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

எதிர்க்கட்சியின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதார மந்திரி பல்பிர் சிங் சித்து நேற்று கூறுகையில், ‘இந்த விவகாரத்தை ஊடகங்கள் வழியாக அறிந்ததுமே இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். அதன்படி இந்த விவகாரத்தில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படும்’ என்று கூறினார்.

அதேநேரம் தடுப்பூசி திட்டம் தனது துறையின் கீழ் வராது எனக்கூறிய அவர், இதை மாநில தலைமை செயலாளரும், மாநிலத்துக்கு தடுப்பூசி திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி விகாஸ் கார்க் ஆகியோர்தான் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தங்கள் துறைக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளை ஆஸ்பத்திரிகளிலும், முகாம்களிலும் இலவசமாகவே மக்களுக்கு போட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தடுப்பூசியை கொள்முதல் செய்து தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பஞ்சாப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story