லாரி டிரைவர் பாதியிலேயே இறக்கிவிட்டு சென்றதால் சத்தியமங்கலத்தில் தவித்த கர்நாடக தொழிலாளர்கள்; தன்னார்வலர்கள் மீட்டு உணவு வழங்கினர்
லாரி டிரைவர் பாதியிலேயே இறக்கி விட்டு சென்றதால், சத்தியமங்கலத்தி்ல் தவித்த கர்நாடக மாநில தொழிலாளர்களை தன்னார்வலர்கள் மீட்டு உணவு வழங்கினர்.
சத்தியமங்கலம்,
லாரி டிரைவர் பாதியிலேயே இறக்கி விட்டு சென்றதால், சத்தியமங்கலத்தி்ல் தவித்த கர்நாடக மாநில தொழிலாளர்களை தன்னார்வலர்கள் மீட்டு உணவு வழங்கினர்.
தவிப்பு
சத்தியமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் பழைய பஸ் நிலையம் அருகே லாரியில் இருந்து ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக ஒரு கும்பல் இறங்கியது. பின்னர் அந்த லாரி அங்கிருந்து சென்றுவிட்டது.
லாரி சென்றதும் அதில் இருந்து இறங்கியவர்கள் எங்கு செல்வது என வழி தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர். அதில் 26 ஆண்கள், 26 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் என மொத்தம் 72 பேர் இருந்தனர். இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் விரைந்து சென்று லாரியில் இருந்து இறங்கியவர்களிடம் விசாரித்தனர்.
பாதியிலேயே...
அப்போது அவர்கள் கூறுகையில், ‘நாங்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள சூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள். கோவை மாவட்டம் ஆனைமலை, பொள்ளாச்சி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தோம். சிலர் மீன் பிடிக்கும் தொழிலும் செய்து வந்தோம். ஊரடங்கு காரணமாக எங்களுக்கு வேலை எதுவும் இல்லை. இதனால் நாங்கள் வருமானம் இல்லாமல் வறுமையால் வாடினோம்.
இதுபற்றி அறிந்ததும் பொள்ளாச்சி தாசில்தார் எங்களை எல்லாம் ஒரு லாரியில் ஏற்றி கர்நாடக மாநில எல்லையில் கொண்டுவிடும்படி அதன் டிரைவரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து நாங்கள் அனைவரும் லாரியில் ஏறி பயணித்தோம். ஆனால் டிரைவர் மலைப்பகுதியில் லாரி செல்லாது என கூறி இங்கு பாதியிலேயே இறக்கி விட்டு சென்றுவிட்டார். தற்போது நாங்கள் நிற்கும் இந்த இடம் எது என்று எங்களுக்கு தெரியாது. நாங்கள் அனைவரும் கர்நாடகாவுக்கு செல்ல வேண்டும்,’ என்றனர்.
உணவு வாங்கி கொடுத்த தன்னார்வலர்கள்
மேலும் இதுபற்றி சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தெரிந்ததும் தாசில்தார் ரவிசங்கர் நேரில் வந்து விசாரித்தார். பின்னர் கர்நாடக மாநில தொழிலாளர்களை தன்னார்வலர்கள் மீட்டு அவர்களுக்கு தேவையான இரவு உணவும், குழந்தைகளுக்கு பாலும் வாங்கி கொடுத்து பஸ் நிலையத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை சத்தியமங்கலம் அம்மா உணவகத்தில் சிற்றுண்டி அனைவருக்கும் வாங்கி கொடுக்கப்பட்டது. பின்னர் காலை 9 மணி அளவில் லாரி ஒன்று சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் லாரியில் ஏற்றப்பட்டு தாளவாடியை அடுத்து கர்நாடக மாநில எல்லையில் புளிஞ்சூரில் கொண்டு விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த லாரியில் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ஒருவரும் உடன் சென்றார்.
Related Tags :
Next Story