தாளவாடி அருகே நாயை கடித்து கொன்ற சிறுத்தை; பொதுமக்கள் அச்சம்


தாளவாடி அருகே நாயை கடித்து கொன்ற சிறுத்தை; பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 6 Jun 2021 2:21 AM IST (Updated: 6 Jun 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே நாயை சிறுத்தை கடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

தாளவாடி
தாளவாடி அருகே நாயை சிறுத்தை கடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
புலிகள் காப்பகம் 
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 
இதில் புலி மற்றும் சிறுத்தை ஆகியவை வனப்பகுதியையொட்டி உள்ள மலைக்கிராமங்களுக்குள் புகுந்து நாய், ஆடு, மாடுகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது. 
கடித்து குதறி...
இந்த நிலையில் தாளவாடி அருகே உள்ள ஓசூர் கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்து நாயை கடித்து கொன்ற சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
தாளவாடியை அடுத்த ஓசூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 42). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இதற்காக வீட்டின் காவலுக்காக ஒரு நாயும் வளர்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நாயை கட்டி வைத்து விட்டு தூங்க சென்றுவிட்டார். 
நேற்றுக்காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த நாயை காணவில்லை. உடனே அவர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். அப்போது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் நாய் கடித்து குதறி கொல்லப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
பொதுமக்கள் அச்சம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாளவாடி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாயை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது அது சிறுத்தையின் கால் தடம் என உறுதி செய்தனர். நள்ளிரவில் குமாரின் வீட்டுக்கு வந்த சிறுத்தையானது நாயை கடித்து கொன்று உள்ளது. பின்னர் நாயை கவ்வி தூக்கியபடி சென்ற சிறுத்தை அதை சிறிது தூரத்தில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. 
கிராமத்துக்குள் புகுந்து நாயை சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து, அதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,’ என வேண்டுகோள் விடுத்தனர். 

Next Story