1,300 கொரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்த சமூக ஆர்வலர் பலி


1,300 கொரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்த சமூக ஆர்வலர் பலி
x
தினத்தந்தி 6 Jun 2021 4:09 PM IST (Updated: 6 Jun 2021 4:09 PM IST)
t-max-icont-min-icon

1,300 கொரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்த சமூக ஆர்வலர், தொற்றால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தார்.

சமூக ஆர்வலர்
நாக்பூரை சேர்ந்தவர் சந்தன் நிம்ஜே (67). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். கிங் கோப்ரா என்ற இளைஞர் படையில் தன்னை இணைத்து கொண்டு சமூக ஆர்வலராக பணியாற்றி வந்தார். மேலும் கொரோனா தொடங்கிய காலம் முதல் இவர் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக அவர் சமீபத்தில் நாக்பூர் மேயர் சார்பில் கொரோனா போராளி என்ற பாராட்டை பெற்றார்.இந்த நிலையில் கடந்த மாதம் 2-ந் தேதி சந்தன் நிம்ேஜ மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் 
இடம் கிடைக்காததால், நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சந்தன் நிம்ஜே சென்றார். அங்கு ரூ.1 லட்சம் ரொக்கமாக கேட்டனர். கையில் பணம் இல்லாததால், வீடு திரும்பிய அவர் 5-ந் தேதி மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மறுநாள் சந்தன் நிம்ஜே குடும்ப உறுப்பினர்களும் மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

பலியான பரிதாபம்
கொரோனா காரணமாக சந்தன் நிம்ஜேயின் 2 மகன்களும் ஏற்கனவே வேலை இழந்து இருந்த வேளையில், குடும்பமே கொரோனா பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதால், பணமும் கரைந்து போனது. சந்தன் நிம்ஜேக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் கேட்ட மருந்தும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் அவரை 26-ந் தேதி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கு அழைத்து செல்லும் முன் அவர் உயிரிழந்து விட்டார். இந்த சோகம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

உதவவில்லை
இதில் பெருந்துயரம் என்னவென்றால், 1,300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்த அவருக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய அரசு அல்லது மாநகராட்சி அதிகாரிகள் முன்வரவில்லை என்று கிங் கோப்ரா இளைஞர்கள் படையினர் குற்றம்சாட்டி உள்ளனர்.இதுகுறித்து இளைஞர் படையின் நிறுவனர் அர்விந்த் ரதுதி கூறுகையில், "கொரேனா போராளியான சந்தன் நிம்ஜேக்கு சிகிச்சை அளிக்க குறிப்பிட்ட மருந்துக்காக மாவட்ட கலெக்டர், அரசியல் தலைவர்கள் பலரிடம் உதவி கோரினோம். யாரும் உதவ முன்வரவில்லை. இதுதொடர்பாக மாநில அரசு, நாக்பூர் மாவட்ட நிர்வாகம், நாக்பூர் மாநகராட்சிக்கு எதிராக மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளையில் வழக்கு தொடர உள்ளேம்’’ என்றார்.

Next Story