2,880 மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது
பெங்களூருவில் இருந்து உருளைக்கிழங்கு ஏற்றி வந்த வேனில் மறைத்து வைத்து கடத்திய 2,880 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் :
மதுபாட்டில்கள் கடத்தல்
கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் மதுபானம் கடத்தி வருபவர்களை போலீசார் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திண்டுக்கல்லுக்கு மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, விஜய் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் திண்டுக்கல் அருகே உள்ள குட்டியப்பட்டி பிரிவில், வத்தலக்குண்டு சாலையில் தீவிர வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர்.
உருளைக்கிழங்கு வேனில்...
அப்போது அந்த வழியாக உருளைக்கிழங்குகளை ஏற்றி கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். வேனில் இருந்த உருளைக்கிழங்குமூட்டை களை போலீசார் அகற்றி பார்த்தனர்.அப்போது உருளைக்கிழங்கு மூட்டைகளின் அடிப்பகுதியில் பெட்டி, பெட்டியாக மதுப்பாட்டில்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த வேனை ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த ஷேக் சல்மான் (வயது 25) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த வேனுக்கு முன்னால் சென்ற காரில் இருந்தவர்கள் தான் மதுபாட்டில்களை கடத்தி வருவதாக டிரைவர் கூறினார். உடனே அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
3 பேர் கைது
காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்த முகமது இஸ்மாயில் (33), ஏ.பி நகரை சேர்ந்த பவுல் பெர்னாண்டஸ் (30) என்று தெரியவந்தது.
பெங்களூருவில் இருந்து திண்டுக்கல்லுக்கு அவர்கள் மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளனர். போலீசில் சிக்காமல் இருப்பதற்காக உருளைக்கிழங்குகளுக்கு அடியில் மதுப்பாட்டில்களை வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த வேனில் இருந்த 2 ஆயிரத்து 880 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் மதுபாட்டில்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் மற்றும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story