கொரோனா பரவல் அதிகரிப்பால், நம்பியூர் அருகே ஒழலக்கோவில் கிராமத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு; அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு


கொரோனா பரவல் அதிகரிப்பால், நம்பியூர் அருகே ஒழலக்கோவில் கிராமத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு; அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 7 Jun 2021 1:47 AM IST (Updated: 7 Jun 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் அதிகரிப்பால் நம்பியூர் அருகே உள்ள ஒழலக்கோவில் கிராமத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நம்பியூர்
கொரோனா பரவல் அதிகரிப்பால் நம்பியூர் அருகே உள்ள ஒழலக்கோவில் கிராமத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலையின் பரவல் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த 24-ந் தேதியில் இருந்து தமிழகத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு குறைய தொடங்கியது. எனினும் ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட 11 மாவட்டங்களில் கொரோனாவின் பாதிப்பு குறைந்தபாடில்லை.
இதனிடையே இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. 
அனைத்து கட்சி கூட்டம்
இதற்கிடையே ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ஒழலக்கோவில் ஊராட்சியில் சின்னசெட்டிபாளையம், நல்லகட்டிபாளையம், மலையப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
இந்த நிலையில் ஒழலக்கோவில் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதை மனதில் கொண்டு ஊராட்சி சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 
கடும் நடவடிக்கை
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:-
* வருகிற 7-ந் தேதி (அதாவது இன்று) முதல் வருகிற 14-ந் தேதி வரை ஒழலக்கோவில் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. 
* ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் மருந்து கடைகள், பெட்ரோல் பங்க், பால் கொள்முதல் நிலையங்கள் தவிர காய்கறி, மளிகை கடைகள், ஓட்டல்கள், இறைச்சிக்கடைகள், வியாபார நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், இதர தொழில் நிறுவனங்கள் அனைத்தும் செயல்படக்கூடாது.
* மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
* கொரோனா வைரஸ் தொற்று இந்த பகுதியில் முற்றிலும் ஒழிய பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேற்கண்டவாறு முடிவுகள் எடுக்கப்பட்டன. 
தமிழகம் முழுவதும் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்து உள்ள நிலையில், ஒழலக்கோவில் ஊராட்சியில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ள தகவலை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கேட்டு சென்றனர்.

Next Story