கொரோனா பரவல் காரணமாக, கோபியில் 9 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைப்பு

கொரோனா பரவல் காரணமாக கோபியில் 9 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளன.
கடத்தூர்
கொரோனா பரவல் காரணமாக கோபியில் 9 வீதிகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளன.
கடுமையான நடவடிக்கை
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரே தெரு அல்லது வீதியில் 3-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அந்த பகுதிகளை தடுப்புகள் வைத்து அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் நகராட்சி, ஊராட்சி, சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா? என கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு வீட்டில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அவர்கள் உடனே கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
கோபியில் பரவும் கொரோனா
அதுமட்டுமின்றி பரிசோதனையில் யாருக்காவது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் உடனே அவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு சிலர் டாக்டர் அறிவுரைகளின்படி வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் கோபி பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. எனவே கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நகராட்சி துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தடுப்புகள் அமைப்பு
அதன்படி கோபி பகுதியில் ஒரே வீதி மற்றும் தெருவில் 3-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த தெரு அல்லது வீதிகளில் தடுப்புகள் அமைத்து அடைத்து தனிமைப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி கோபியில் உள்ள சி.கே.எஸ்.நகர், திருமால் நகர், வேலுமணி நகர், யாகூப் வீதி, புகழேந்தி வீதி, ராமர் எக்ஸ்டன்ஷன், சக்தி விநாயகர் வீதி உள்பட 9 வீதிகளில் கம்புகள் மற்றும் கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story






