காய்கறி, மளிகை கடைகள் திறக்க இன்று முதல் அனுமதி
காய்கறி மற்றும் மளிகை கடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்
ஈரோடு
காய்கறி மற்றும் மளிகை கடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்
ஊரடங்கு நீட்டிப்பு
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 14-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.
எனவே, இந்த மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலும், அதே சமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் இன்று (திங்கட்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காய்கறி - மளிகை கடைகள்
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் மீன் சந்தைகளை அமைக்க மாற்று ஏற்பாடுகளுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இறைச்சி கூடங்களில் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திர பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
இ-பாஸ்
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க, தொடர்புடைய மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணிக்கலாம்.
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் 10 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படலாம். தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம், பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
முக கவசம்
பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும், இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டங்களையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையினை பெற வேண்டும். மேலும் மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story