தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்தாலும், அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஈரோடு தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. பெரிய நகரங்களில் கூட பாதிப்பு குறைந்து வரும் சூழ்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறையாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், உயிரிழப்பும் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
அதேசமயம் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் பல இடங்களுக்கு சென்று அலைகிறார்கள். இதனால் தடுப்பூசி போடும் மையங்களில் மிக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பதை கடந்த சில நாட்களாக காணமுடிகிறது. தடுப்பூசியின் கடும் தட்டுப்பாடு காரணமாக அங்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க முடிவதில்லை. இதனால் டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.
மீண்டும் நிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசி இல்லாததால் அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பிறகு தடுப்பூசிகள் வரபெற்றதை தொடர்ந்து தடுப்பூசிகள் போடும் பணி மீண்டும் தொடங்கியது. இதற்காக பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன் வழங்கி தடுப்பூசிகள் போடப்பட்டன. இருப்பு உள்ள அளவை பொறுத்து தினமும் 100 முதல் 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்தநிலையில் தடுப்பூசிகள் இல்லாததால் ஊசி போடும் பணி மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஒரு சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு உள்ள தடுப்பூசிகள் நேற்று காலை டோக்கன் வினியோகம் செய்து போடப்பட்டது. அதுவும் காலை 10 மணிஅளவில் தீர்ந்து விட்டதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள். மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களின் முன்பு தடுப்பூசி போடப்படவில்லை என்ற அறிவிப்பு எழுதி வைக்கப்பட்டு இருந்தது.
இருப்பு இல்லை
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் இருப்பு உள்ளதை பொறுத்து மக்களுக்கு தினமும் செலுத்தி வந்தோம். ஆனால், 700 பேருக்கு இருப்பு இருந்த தடுப்பூசிகளும் போடப்பட்டுவிட்டது. தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால், ஊசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்துக்கு தடுப்பூசிகள் வந்த பிறகு மீண்டும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






